மக்களாட்சியில் “தன் மக்கள்” ஆட்சி; கடைசிவரை தொண்டனுக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசா ?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மீண்டும் அக்கட்சி தலைமையின் ஆதிக்க மன நிலையும், வாரிசு அரசியலும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக ஜனவரி 11ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அதிமுக கட்சிக்குள் குழப்பம் இருந்தாலும், கூட்டணிக் கட்சியினர் பொறுப்பாக நடந்து கொண்டு வருகின்றனர். மேலும் வேட்பாளர் தேர்விலும் அதிமுக மும்மூரம் காட்டி வருகிறது.

அதே சமயத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தகப்பன் அவருக்குப் பிறகு மகன் அவருக்குப் பிறகு பேரன் என்ற மோசமான வாரிசு அரசியல் திமுக- காங்கிரஸில் தலைமை முதல் அடிமட்டம் வரை பரவி உள்ளதற்கு இந்த வேட்பாளர் அறிவிப்பே (தேர்வு அல்ல) ஒரு உதாரணம்.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சி தனது கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுவை கேட்டது. ஈவிகே எஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தும், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் “மக்கள் ராஜனும் “
போட்டிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர்.

இதில் மக்கள் ராஜன் அரசியல் பின்புலம் இல்லாதவர் கட்சிக்காகவே 30 வருடங்களாக வேலை செய்யும் ஒரு சாதாரண தொண்டன். விருப்ப மனுவை தாக்கல் செய்ய சென்னை வந்த அவர் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தங்கி தனக்கு எப்படியாவது சீட் கொடுக்க வேண்டும் என பல்வேறு தலைவர்களிடம் முறையிட்டார். தனக்கு சீட் கிடைக்கும் என மீடியாக்களின் முன்பு அவர் கண்ணீர் மல்கியவாறு பேட்டியளித்த காட்சிகளும் கவனத்தை ஈர்த்தன.

அதே சமயத்தில் சீட்டு கேட்ட மற்றொரு வேட்பாளர் இரண்டு முறை காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மற்றொரு மகன். விருப்ப மனுக்கள் பரிசீலனையில் இருக்கும் போதே தனது இளைய மகனுக்கே தான் சீட் கேட்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். இரண்டு பேர் விருப்ப மனு தாக்கல் செய்து காத்திருக்கும் நிலையில், ஒரு கட்சியின் மூத்த தலைவர் போல் நடந்து கொள்ளாமல் தனது மகனுக்கு சீட் கிடைக்க வேண்டும் என அவர் ஆர்வம் காட்டியது மன்னர் ஆட்சியின் உச்சகட்டம்.

இவர் இப்படி என்றால் காங்கிரஸ் தலைமை அதைவிட ஒருபடி மோசமாக முடிவு செய்து விருப்பமனு தாக்கல் செய்யாத இவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தது.

பாவம் மக்கள் ராஜன், காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரியாதவர் உழைத்தால் போதும் நம்மை கட்சி அங்கீகரித்து விடும் என நம்பி இரண்டு நாட்களாக சென்னையில் காத்து கிடந்து ஏமாந்து போனார்.

பின்னர் வழி தெரியாமல் மீடியாக்களை சந்தித்து தனக்கு கட்சியின் மேல் எந்த கோபமும் இல்லை என சப்பை கட்டு கட்டினார். இனி தொகுதி பக்கம் போனாலும் அவரை ஈவிகேஎஸ் இளங்கோவனோ அவரது ஆதரவாளர்களோ ஏற்றுக்கொள்வார்களா? உடனிருந்து பணியாற்ற அனுமதிப்பார்களா? என்பது சந்தேகமே

மக்கள் ராஜன் போன்ற நிர்வாகிகள் காங்கிரஸ் போன்ற கட்சியில் கடைசி வரைக்கும் சாதாரண தொண்டனாகவே இருந்து மடிந்து விட வேண்டியது தான். தங்களின் இதுபோன்ற செயல்பாடுகளால் தான் காங்கிரஸ் கட்சி கரைந்து வருகிறது என்பதை இத்தனை தோல்விகளுக்கும் பின்னரும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உணராதது ஆதிக்க மனப்பான்மையின வெளிப்பாடு

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறி தான். மக்களின் அனுதாபத்தை பயன்படுத்தி எளிதாக ஓட்டு வாங்கி விடலாம் என்ற கணக்கில் அவர் தேர்தலில் குதித்திருக்கிறார்.

மேலும் ஆளுங்கட்சியான திமுக இதை ஒரு மானப் பிரச்சினையாக கருதி பணத்தை வாரி இறைக்கும் அராஜகத்தில் ஈடுபடும் என்பதும் காலம்காலமாக நாம் பார்த்ததே. அதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனின் கடந்த கால பேச்சுக்கள் வக்கிரத்தின் வெளிப்பாடாகவே இருந்துள்ளது.

ஒன்றரை மணி நேரம் நீங்களும் மோடியும், தனி அறையில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என ஜெயலலிதாவை குறிப்பிட்டு பொதுக்கூட்டத்தில் அநாகரிகமாக பேசியவர் இவர்தான். ஆகையால் இவரை ஜெயிக்க வைக்க காங்கிரசும், திமுகவும் கூட்டணி அமைத்து எத்தனை முயற்சிகள் செய்வது ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை அவமானப்படுத்துவதாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top