வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு, வழங்கப்படும் இலவச, வேஷ்டி சேலைகளை பொங்கல் பண்டிகை முடிந்து 15 நாள் ஆகியும் வழங்காமல், மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக அரசை கண்டித்து முன்னாள் முதல்வர் ஓ.பி. எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :”இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழியே, இலவசமாக வேட்டி – சேலை வழங்கப்பட்டது. இந்தாண்டு இலவச
வேட்டி சேலை வழங்க, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.பத்து வடிவமைப்புகளில் சேலை; ஐந்து வடிவமைப்புகளில் வேட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வினியோகிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, கடந்த நவம்பர் மாதம் செய்திகள் வந்தன.
இன்று பொங்கல் பண்டிகை முடிந்து, 10 நாட்களுக்கு மேலாகியும், இலவச வேட்டி, சேலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. இது கண்டனத்துக்கு உரியது. பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், இந்த ஆண்டு வேட்டி – சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகம், மக்கள் இடையே ஏற்பட்டுள்ளது. இதை தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலைகளை, ரேஷன் கடைகள் வழியே வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும்காலங்களில், பொங்கல் பண்டிகைக்கு முன், வேட்டி, சேலைகள் பொதுமக்களுக்கு
வழங்கப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்” என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, பொங்கலுக்கு ரூ. 5,000/- வழங்க அதிமுக அரசை நிர்பந்தித்து போராட்டம் நடத்திய திமுக, ஆளும் கட்சியாக வந்தபின் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1,000/- மட்டுமே வழங்கியது. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து 2 வருடங்களை நெருங்கியும் இதுவரை வழங்கப்படவில்லை. இத்தனை ஆண்டுகாலமாக வழங்கப்பட்டுவந்த இலவச வேட்டி, சேலையைத் தருவோம் என்று பொங்கலுக்கு முன்வரை உறுதி அளித்த திமுக இப்போதுவரை வழங்காமல், மக்களை ஏமாற்றி விடலாம் என திட்டமிட்டிருப்பது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பினை சேர்க்காமல் கரும்பு விவசாயிகளை வஞ்சிக்க முயற்சித்தது. அதனை எதிர்த்து பாஜக களம் இறங்க எப்போதும் போல் திமுக பின்வாங்கி பொங்கல் தொகுப்பில் கரும்பினை சேர்த்தது. கடந்த ஆண்டு வழங்கிய பொங்கல் பரிசில்,உருகிய வெல்லம், புளியில் பல்லி என திமுகவின் தில்லாலங்கடிக்கு குறைவே இல்லை.பொய்யிலே வளர்ந்து, பொய் வாக்குறுதிகளைத் தந்து ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு இதெல்லாம் சகஜமப்பா என
நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.