ராமர் கோயிலின் கருவறையில் வைக்க இருக்கும், ராமர், சீதை சிலையை செதுக்குவதற்கான இரண்டு அரிய பாறைகள், நேபாளத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை இன்று வந்தடைந்தன.

ராமர் கோயிலின் கருவறையில் வைக்க இருக்கும், ராமர், சீதை சிலையை செதுக்குவதற்கான இரண்டு அரிய பாறைகள், நேபாளத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை இன்று வந்தடைந்தன. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செயலாளர் ராஜேந்திர சிங் பங்கஜ், நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் இருந்து இரண்டு புனித பாறைகளை கொண்டு வந்தார்.இந்த ஷாலிகிராம் பாறைகள் 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் இருந்து இரண்டு வெவ்வேறு டிரக்குகளில் அந்த பாறைகள் அயோத்தியை அடைந்தது. ஒரு பாறையின் எடை 26 டன் என்றும், மற்றொன்று 14 டன் எடை கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்து கடவுளான ராமர் பிறந்த இடத்தில் புனித பாறைகளை அர்ச்சகர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்றனர். அவர்கள் கற்பாறைகளை மாலைகளால் அலங்கரித்து சடங்குகளை செய்தனர். அவற்றை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர். நேபாளத்தின் காளி கண்டகி நதியில் இருந்து எடுக்கப்படும் அரிதான ஷாலிகிராம் பாறைகள் மூலம், ராமர், சீதை சிலை வடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஷாலிகிராம் பாறைகள் அங்கு மட்டுமே காணப்படுகிறது. இந்தக் கல்லில் இருந்து செதுக்கப்பட உள்ள குழந்தை வடிவிலான ராமர் சிலை, ராமர் கோயிலின் கருவறையில் வைக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி பண்டிகைக்கு அது தயாராகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.