தற்போது பால் கொள்முதல் தினசரி 10லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்து ஆவினுக்கான பால் வரத்து கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் சூழலில் தற்போதைய செயல்பாடுகள் ஆவின் பால் விற்பனையை படுபாதாளத்தில் தள்ளி விடும் என பால் சங்க முகவர் தலைவர் பொன்னுச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்து கடந்த 20 மாதங்களில் ஆவின் பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகிறது. ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலையையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்தநிலையில் ஆவின் பச்சை பால் பாக்கெட்டில் உள்ள கொழுப்பு சத்தை குறைத்துள்ள நிலையில், பாலின் விலையை குறைக்காமல் அதே விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின்
நிலைப்படுத்தப்பட்ட பாலான பச்சை நிற பால் பாக்கெட்டில் கொழுப்பு சத்து 4.5%, திடசத்து 8.5% என இருந்ததை நிர்வாக காரணங்களுக்காக என்று கூறி இன்று (01.02.2023) முதல் கொழுப்புச் சத்து அளவை 1% குறைத்து, அதாவது கொழுப்பு சத்து 3.5%, திடசத்து 8.5% என சத்துக்களின் அளவை குறைத்து, விற்பனை விலையை குறைக்காமல், அதே விற்பனை விலையில் (500ML 22.00), பச்சை நிற பாக்கெட்டில் “Cow Milk” என்கிற பெயரில் மக்களை ஏமாற்றும்
செயலை கோவை மாவட்ட ஆவின் முன்னெடுத்துள்ளதையும், மக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 3.00ரூபாய் விலை உயர்வை திணித்திருப்பதையும் (குறைக்கப்பட்ட கொழுப்பு சத்து அடிப்படையில் 1 Total Solids ரூபாய் 2.91ஆகும்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆட்சியோடு ஒப்பிடுகையில் தற்போது பால் கொள்முதல் தினசரி 10லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்து ஆவினுக்கான பால் வரத்து கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் சூழலில் தற்போதைய செயல்பாடுகள் ஆவின் பால் விற்பனையை படுபாதாளத்தில் தள்ளி விடும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்தில் கொள்ளுமாறு தமிழ்நாடுபால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.