”குறிப்பிட்ட அரசு அமைப்புகளின், ‘டிஜிட்டல்’ முறைகளுக்கு, ‘பான்’ எனப்படும், நிரந்தர கணக்கு எண் இனி பொது வணிக அடையாளமாக பயன்படுத்தப்படும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு, ‘பான்’ எனப்படும் நிரந்தர கணக்கு எண், வருமான வரித்துறையால் அளிக்கப்படுகிறது. எண்களும், ஆங்கில எழுத்துக்களும் உடைய 10
இலக்கமே நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:
மத்திய அரசின் குறிப்பிட்ட துறைகளின், ‘டிஜிட்டல்’ அமைப்புகளின் பொதுவான வணிக அடையாளமாக நிரந்தர கணக்கு எண் இனி பயன்படுத்தப்படும். இது எளிதான வணிக நடவடிக்கைக்கு சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்படும். இதற்காக, ஒருங்கிணைந்த தகவல் சேகரிப்பு முறைகளின் அமைப்பு உருவாக்கப்படும்.
இதன் வாயிலாக, பொதுவான இணையதளம் மூலம், வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, தகவல்கள் பிற அரசு நிறுவனங்களுடன் பகிரப்படும். இதேபோல் ஆதார் மற்றும் ‘டிஜி லாக்கர்’ பொதுவான அடையாளமாக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். ‘டிஜி லாக்கர்’ என்பது, மத்திய அரசின்,’டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட
திட்டமாகும். மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும் அமைப்புகளிடம் இருந்து, இவற்றை பெற்று, டிஜிட்டல் வடிவில் வழங்கும் பணியை டிஜி லாக்கர் அளிக்கிறது. எதிர்காலத்தில், ஆவணங்களின் நேரடி பயன்பாட்டை நீக்கவே இந்த தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது” என்றார்.