கடவுள் முன் அனைவரும் சமம் தான், இதில் சாதி வேறுபாடுகள் இல்லை என பிரபல மத குருவான புனித சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ரவீந்திர நாட்டிய மந்திர் ஆடிடோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
அவர் பேசியதாவது, “நமது நாட்டின் மனசாட்சியும் உணவுகளும் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால் கருத்துக்கள் மட்டும் மாறுபட்டு இருக்கின்றன.
நாம் சம்பாதிக்கும்போது நமக்கு பொறுப்பு உருவாகிறது. ஒவ்வொரு வேலையும் நமது சமுதாயத்திற்காக பங்காற்றுகின்றன. அப்படி இருக்கையில், எந்த வேலையும் இதில் பெரியது சிறியது கிடையது. வேலைகளில் பாகுபாடுகள் இல்லாது போல மனிதர்களிலும் பாகுபாடுகள் கிடையாது. கடவுள்களை பொறுத்த அளவில் இங்கு எல்லோரும் சமம்தான். இதில் சாதியோ அல்லது இன்ன சில வேறுபாடுகளோ கிடையாது.
நாட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒரே உணர்வுதான் இருக்கிறது. ஆனால் கருத்துக்கள் வேறுபடுகின்றன. துளசிதாஸ், கபீர் மற்றும் சூர்தாஸ் போன்றே ரோஹிதாஸ் மேன்மை கொண்டவர். அவரது மேன்மை கருதி அவர் போன்றே புனித சிரோமணி என்று அழைக்கப்படுகிறார். இவர் பலரின் இதயங்களை தொட்டு அவர்களை கடவுள் நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளார். மதம் என்பது பசியை போக்குவது மட்டுமே என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மதத்தின் பணிகள் இதைவிட பெரியது.
நீங்கள் உங்கள் வேலை எதுவாக இருந்தாலும் அதை செய்யுங்கள். உங்கள் மதத்தின்படி அதனை செய்யுங்கள். அதன் மூலம் சமூகத்தை ஒன்றிணைத்து அதன் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள், இதைதான் மதம் வலியுறுத்துகிறது. இதைதான் ரோஹிதாஸ் வலியுறுத்தினார். இப்படியாகதான் அவர் பல சீடர்களை உருவாக்கினார். சத்தியம், இரக்கம், அகத்தூய்மை மற்றும் தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் முயற்சி ஆகிய நான்கு மந்திரங்களை ரோஹிதாஸ் சமூகத்திற்கு கொடுத்து சென்றிருக்கிறார். இதனை நாம் முழு மூச்சாக கடைப்பிடிக்க வேண்டும்.
உங்களை சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். ஆனால், எந்த சூழ்நிலையிலும் உங்களின் மதத்தை விட்டுவிடாதீர்கள். மதச் செய்திகளை வெளிப்படுத்தும் விதம் வேறுபட்டாலும் மதம் ஒன்றைதான் போதிக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால், அது மற்ற மதங்களுக்கு தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.