இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 4,900 பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுபற்றி மத்திய வர்த்தக இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பேசுகையில்: நாட்டில் 4,900 பன்னாட்டு நிறுவனங்கள் புதிதாக செயல்படத் தொடங்கி உள்ளன. அதேநேரத்தில், ஏற்கெனவே செயல்பட்டு வந்த பன்னாட்டு நிறுவனங்களில் 1,333 நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
இவற்றில், 313 நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. மீதமுள்ள நிறுவனங்கள் வெளிநாடுகளில் இயங்கும் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக்கொள்வது என்பது இயல்பானதுதான். ஆனால், ஒரு நிறுவனம் மூடப்பட்டால் பல நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அதுதான் முக்கியம். இந்தப் புதிய நிறுவனங்களால் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி உள்ளது எனத் தெரிவித்தார்.