டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையேயான மோதலை ஒருதலை பட்சமாக சித்தரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் நேற்று மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில், சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது சிவாஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஏபிவிபி அமைப்பினர் சென்ற பிறகு அங்கு வந்த இடதுசாரி மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் சிவாஜி மற்றும் மகாராணா பிரதாப் சிம்மன் படங்களை தரையில் தூக்கி வீசியுள்ளனர். மேலும் அங்கிருந்த ஏபிவிபி அமைப்பு மாணவிகளையும் அவதூறாக பேசியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏபிவிபி அமைப்பினர் அதனை தட்டிக் கேட்கவே இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அப்போது ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் இருதரப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது
இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மாணவர்கள் அமைதி காக்க கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால் அரசியல் லாபத்துக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கும் தமிழக அரசியல்வாதிகள் இதனை வைத்தும் வெறுப்பு அரசியலை தூண்ட முயற்சித்து வருகின்றனர்.குறிப்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நடந்த சம்பவத்தை மறைத்து தமிழ்நாட்டு மாணவர் நாசர், தமிழர் என்றதால் தாக்கப்பட்டதாக திட்டமிட்டு தாக்கப்பட்டதை போன்று டிவிட் செய்துள்ளார்.
அவரது இந்த டிவிட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள முதலமைச்சராக இருதரப்பினரையும் கண்டித்து படிக்க அறிவுறுத்துவதை விட்டுவிட்டு எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகிகளால் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை வாயை திறக்காத ஸ்டாலின், ஜேஎன்யு பல்கலைக்கழகம் என்றவுடன் வாயை திறப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.