கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே ?; திராவிட மாடல் அரசுக்கு அண்ணாமலை கேள்வி

2030ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள், ஏழை, எளிய மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்விச் செலவை மத்திய அரசே ஏற்று கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளுக்கு இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது

தமிழகத்தை பொறுத்தவரை இந்த திட்டத்திற்கு, 2021-22 நிதியாண்டில் ரூ.1,598 கோடியும், 2022-23 நிதியாண்டில் இதுவரை ரூ.1,421 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக தமிழக பள்ளிகளுக்கு மழலையர் வகுப்புக்கான நிதி வழங்கப்படவில்லை என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது. இதனை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு ஆண்டுகளாக கல்வி கட்டணத்தை தமிழக அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கிய ரூ.3000 கோடி பணம் என்ன ஆனது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன என்று அமைச்சர் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பல அரசு பள்ளிகளில் விளையாட்டுக்கான தரமான உட்கட்டமைப்பு விளையாட்டு மைதானங்களோ, உபகரணங்களோ இல்லை என்பதை விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி அறிவாரா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றுவதாக அறிவித்த அறிவிப்பு என்ன ஆனது எனவும் சாடியுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்காமல் தாமதிப்பது, ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தையே முடக்க, திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மேலும் தாமதிக்காமல் உடனடியாக தனியார் பள்ளிகளுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top