அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் பணியமா்த்தப்படுவா் என்று பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த வீரா்களில் சிறப்பாகப் பணியாற்றும் 25 சதவீதத்தினருக்கு மட்டும் நிரந்தரப் பணி வழங்கப்படும். மற்றவா்கள் பணிக்கொடையுடன் விடுவிக்கப்படுவா் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தில்லி, கேரளம், பஞ்சாப் மற்றும் ஹரியானா, பீகார், உத்தரகண்ட் உயா்நீதிமன்றங்களில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கலாகின. இந்த மனுக்களை டெல்லி உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா தலைமையிலான அமர்வு, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தத் திட்டம் தேசிய நலனைக் கருத்தில் கொண்டும், பாதுகாப்புப் படையை மேம்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்டது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனது.