ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாமல் கதறும் கம்யூ. – ஹெச்.ராஜா சாடல்

காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் கதறியுள்ளனர். இந்த, நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா அதற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இந்திய நாட்டின் பெருமைகள் குறித்து பேசுவார். இவரது, கருத்துக்கள் இன்றைய இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளன. எனினும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.க., தி.மு.க., வி.சி.க மற்றும் இடது சாரிகள் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை கவர்னர் மாளிகையில், பேராசியர் தர்மலிங்கம் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், “சனாதன தர்மம் என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்தையும் உள்ளடக்கிய ‘தர்மம்’ என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சமஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளில் காணப்படுகிறது.

‘தர்மம்’ என்ற சொல்லை ‘மதம்’ என்பதன் ஆங்கில பொருளாக தவறாகப் புரிந்துகொண்டு, தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் மாபெரும் தவற்றைச் செய்து விட்டோம். நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பிரபஞ்சத்தின் நித்திய சட்டம், தர்மமாகும்.

பிரிட்டிஷ் ஆட்சி, பாரதத்தின் சமூகம், கலாசாரம் மற்றும் நாகரிகத்திற்க்கு அழிவை ஏற்படுத்தியது. நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது வெளிநாட்டு இறையியல் கோட்பாடு, டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகிய 4 முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள்தான். இதனால்தான், கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் இருக்கிறோம். கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என்றே கட்டுரையை எழுதி இருக்கிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனைதான் இந்தியாவை சிதைத்தது. தற்போது அவரது தத்துவம் புறந்தள்ளப்பட்டிருக்கிறது.

நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கெடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள்காட்டியே பேசுகிறார்கள். காரணம், மேற்கோள் காட்ட இந்த நாட்டிலிருந்து ஒருவர் கூட இல்லை எனக் கருதுகிறார்கள். மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது என்ற ஜனநாயகம் பற்றி பேசும்போது, ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே நபர்தான் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. கருப்பர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை; வேறு வழி இல்லாமல்தான் அவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தார். அதை மறந்துவிடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனை புகழ்கிறார்கள். இதெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை என கூறியிருந்தார்.

ஆளுநரின் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், தி.மு.க., வி.சி.க., மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் கதறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவராக இருந்த ஹெச்.ராஜா, பிரபல எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பஞ்சம், படுகொலை, பேரழிவு என்ற புத்தகத்தின் 195-ம் பக்கத்தை மேற்கோள் காட்டி இருக்கிறார். அதாவது, இந்த, புத்தகம் முழுவதும் கம்யூனிசம் பற்றிய பயங்கர உண்மைகள் பல உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top