ஸ்கூலுக்கு சென்று இருந்தால் தானே நீட் பற்றி தெரியும் – உதயநிதியை பங்கம் செய்த அண்ணாமலை

சென்னை பெருங்கோட்டம், திருவள்ளூர் மேற்கு மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களின் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய பொது செயலாளர் தருண் சுக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி அரசியல் கால் புணர்ச்சி அற்றவர் என்றும் யார் சந்திக்க விரும்பினாலும், நேரம் ஒதுக்கி அவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கு தான் பிரதமர் மோடி இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களை விட தனித்து நிற்பதாகவும் தெரிவித்தார். நான்கு மத்திய அமைச்சர்களை சந்தித்து பரபரப்பாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டால், மக்கள் அவர்களை நம்பி விடுவார்கள் என நினைப்பது எல்லாம் தாத்தா காலத்து அரசியல் எனவும் அவர் விமர்சித்தார்.

பிரதமரை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்த அவர் எங்கிருந்து டெல்லி வந்தார் எனவும் கேள்வி எழுப்பினார்.பொதுமக்கள் அனைவரும் உதயநிதியை பிளேபாய் பிளேபாய் என விமர்சிப்பதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்து பிறகு ஓய்வெடுப்பதற்காக அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு அப்படியே டெல்லி வந்ததாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இத்தனை மூத்த அமைச்சர்கள் இருந்தும் தனது மகனை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனுப்பி வைத்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இதனிடையே நீட் தேர்வை ரத்து குறித்த உதயநிதியின் பேச்சை விமர்சித்த அவர், ஒழுங்காக பள்ளிக்கு சென்று படித்தவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வின் அருமை தெரியும் என்றும், முதலமைச்சர் கோட்டாவில் படித்தவர்கள், முதலமைச்சர் மகன் என்பதற்காக அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராக ஆனவர்களுக்கு நீட்டின் அருமை தெரியாது எனவும் கூறினார். நீட் தேர்வு மூலம் தற்போது சமூகநீதி பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கெடுத்து மீண்டும் தனியார் கல்லூரிகள் மெடிக்கல் சீட்டுகளை அதிக விலைக்கு விற்க உதவுவதற்காக நீட்டை ரத்து செய்ய திமுக அரசு முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top