திண்டுக்கல்லில் அண்மைக்காலமாக ரவுடிகள் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு, ஓட ஓட வெட்டிக்கொலை போன்ற சம்பவங்கள் மீண்டும் அன்றாட செய்திகள் ஆகியுள்ளன

திண்டுக்கல், வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், வியாபாரத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சின்னதம்பி, தனது வீட்டின் அருகே உள்ள சகோதரர் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். அவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பட்டப்பகலில் வீடு புகுந்து சின்ன தம்பியை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொன்றனர்.

திண்டுக்கல் சிறுமலை காரைக்குடியை சேர்ந்தவர் தனபால். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர், சின்னத்திரை நடிகர் கருப்பையா என்பவருக்கு விற்றுள்ளார். 5 ஏக்கர் என விற்பனை செய்யப்பட்ட நிலத்தை சமீபத்தில் அளவீடு செய்த போது நான்கரை ஏக்கர் நிலம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பையா இது குறித்து தனபாலிடம் கேட்டுள்ளார். அப்போது தனபால் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கருப்பையாவை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த கருப்பையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனபாலிடம் துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.