தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், ‘மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா?’ என மத்திய அரசை விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் : “மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா?” என முக ஸ்டாலின் கேட்கிறார் …
அதை தான் நாங்களும் கேட்கிறோம் ஸ்டாலின் அவர்களே! மகாபாரதத்தில் கௌரவ ராஜ்ஜியத்தில், பாஞ்சாலியின் மானத்தை காப்பாற்ற வாய்ப்பிருந்தும், கடமையை நிறைவேற்ற தவறிய திருதராஷ்டிரன் இருப்பது போலத் தான் திமுக அரசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ‘அவசர சட்டம்’ இருந்தும் தடை செய்ய மறுத்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாபாரதத்தில், தவறு என்று தெரிந்தும், புத்திர பாசத்தால் துரியோதனன் செய்த அநியாயங்களை, முறைகேடுகளை அனுமதித்த திருதராஷ்டிரன் இருப்பது போல தான் உங்கள் அரசில் நடைபெறும் தவறுகளை, முறைகேடுகளை தட்டி கேட்க மறுக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
மகாபாரதத்தில் விதுரன் கூறிய நியாயத்தை, நீதியை ஏற்க மறுத்து உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் இருப்பது போலத் தான் தமிழக பாஜக சுட்டிக்காட்டும் நியாயத்தை, நீதியை ஏற்க மறுக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாபாரதத்தை முழுமையாக கற்றறியுங்கள். நெறி தவறி, நீதிக்கு புறம்பாக, தன் மக்களின் நலனுக்காக, நாட்டு நலனை உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் குறித்து அறிந்து கொள்ளுங்கள். திருத்தி கொள்ளுங்கள்.
இராமாயணம் ‘ஒருவர் எப்படி இருக்க வேண்டும்’ என்று போதிக்கிறது. மகாபாரதம் ‘ஒருவர் எப்படி இருக்கக் கூடாது’ என்று போதிக்கிறது. மகாபாரதத்தை முழுமையாக படியுங்கள், தெளிவு பெறுங்கள் என பதிவிட்டுள்ளார்.