விழுப்புரத்தில் பாஜக சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், தமிழ்நாடு பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வெற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவித்தார். அம்மாவட்டத்தில் பாஜக அடுத்தகட்டத்துக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்கட்டமைப்புகளை வைத்து இங்கு அரசியல் நடப்பதே கிடையாது என்றும் சாதியை வைத்து தான் இங்கு அரசியலே நடப்பதாகவும் சாடினார். அந்த நிலையை தற்போது பாஜக உடைத்து கொண்டிப்பதாக தெரிவித்தார்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் யாரும் நிரந்தரமாகஜெயிக்க முடியாமல் குழப்பமாக இருந்த சூழலை பாஜக உடைத்திருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.திரிபுராவில் 2% வாக்குகளுடன் இருந்த பாஜக, தற்போது வளர்ச்சியடைந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளதாகவும்,
நாகலாந்தில் பாஜகவிற்கு இடம் கிடைத்துள்ளதாகவும், மேகலாயவாவில் பாஜக கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடியின் ஆட்சிதான் காரணம் எனத் தெரிவித்த அவர், 1947 முதல் 2014வரை இந்திய பிரதமர்களாக இருந்த அனைவரும் சேர்ந்து எத்தனை முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார்களோ அதனைவிட அதிகமாக கடந்த 9 வருடங்களில் பிரதமர் மோடி அந்த இடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பினை கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர் அதனை தலைவணங்கி ஏற்பதாக கூறினார். காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 2024 தேர்தல் பாஜகவிற்கானதாக இருக்கும் எனவும் கூறினார். இடைத்தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, திமுக அரசின் செயல்பாட்டை மக்கள் ஆராய்ந்து வாக்களித்தனர் என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன் எனவும் கூறினார்.
திமுகவிலிருந்து வெளிவர திருமாவளவன் புதிய யுக்தியை கையாள்வதாக குற்றம்சாட்டிய அவர், திமுக கூட்டணியிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் தைரியமாக வரலாம் என்றும் சாக்கு போக்கு ஏன் திருமாவளவன் கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் கூறினார். திமுக கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கு தைரியம் இல்லாதவர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். தன்னை அவதூறாக பேசுவதற்காக மட்டுமே திருமாவளவன் கூட்டம் போடுவதாக தெரிவித்தார். தங்களின் கூட்டணி பலமாக தான் உள்ளதாகவும் கூறினார். கருத்தியல் குறித்து விவாதிக்க தயாரா என கேட்கும் திருமாவளவன், பாஜக பட்டியல் அணி தலைவர் தடா. பெரியசாமியிடம் கருத்தியல் தொடர்பாக விவாதிக்க தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் ஜாதிய அமைப்புகளை கொண்ட கட்சியாக விசிக உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் நடக்கும் பாதி கலவரங்களுக்கு திருமாவளவன் தான் காரணம் என குற்றம்சாட்டினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கூட வேறு மாநிலங்களில் நின்று பார்த்து விட்டு டெல்லியோடு இப்போது ஒதுங்கியுள்ளார் என விமர்சித்தார். அதே நேரத்தில் கும்முடிபூண்டியை கூட தாண்டாமல் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது என்றும் கிண்டலடித்தார். பரூக் அப்துல்லா தேஜஸ்வி யாதவ் போன்றவர்கள் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வருவது தேசிய அரசியல் இல்லை எனவும் பல்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு தேசிய அரசியல் பற்றி பேசுவது தான் தேசிய அரசியல் எனவும் தெரிவித்தார். விலைபோகாத கத்திரிக்காயை கொண்டு வந்து திமுக தமிழக மக்களை ஏமாற்றுவதாகவும், கர்நாடாகவில் போட்டியிட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு வந்துவிட்டு அதன் பிறகு ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டுவதாக கூறினால் ஏற்போம் என்றும் கூறினார்.