திமுகவின் பகல் கனவை பார்த்து பரிதாபம் தான் வருகிறது ? தலைவர் அண்ணாமலை பதிலடி

ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியது ; தலைவர் அண்ணாமலை

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாலேயே அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த பீதியால் கவலையடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட வெறுப்பு பிரசாரத்தின் விளைவாகவே இதுபோன்று வதந்திகள் பரவுவதாக தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் பயத்தை களைய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அவசரக்குடுக்கை ஆர்.எஸ் பாரதி, இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரமாக ஒருபோதும் இருந்ததில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிடுவதாகவும் சாடியிருந்தார்.

இந்நிலையில் திமுகவினரின் இந்தி எதிர்ப்பு பிரசாரங்களை ஆர்.எஸ் பாரதிக்கு நினைவுபடுத்தி தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தி தெரியாது போடா” என்று முதல்வரின் மகனும், திமுகவின் வருங்கால தலைவருமான உதயநிதி, டி-ஷர்ட் கலாச்சாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கி வைத்தது, விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கையும், திமுக எம்பியுமான கனிமொழி, ஒரு பொய்யான புகாரை வழங்கியது என உடன்பிறப்புகளின் வட இந்தியர்களுக்கு எதிரான வன்மத்தை பட்டியலிட்டுள்ளார். தற்போது உலவும் பொய்யான செய்திகளுக்கு இவையெல்லாம் கூட காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், “வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?” என்று கேட்டிருந்ததாகவும், அதனால்தான் பிரச்சனையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் எனவும் அறிக்கையில் கூறியுள்ளார் .

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க திமுகவின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை எனவும் பதிலடி கொடுத்துள்ளார். அறுபதுகளில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த திமுக செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் “தமிழை கட்டாயப் பாடம்” ஆக்கியதன் மூலம், நாங்கள் தான் செய்திருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் திமுக அரசுக்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்டு நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள் எனவும் அவர் சாடியுள்ளார். திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும், தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் டிஜிபி சைலேந்திரபாபு, திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? எனவும் திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்?. அரசியலுக்காக இரட்டை வேடம் அல்ல, நாடக திமுகவினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள் எனவும் சாடியுள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top