இண்டஸ்ட்ரீஸ் 4.0 தலைமுறையில் இந்தியா உருவாக்கும் மென்பொருட்கள், சர்வதேச அளவில் முன்னுதாரணமாக விளங்குகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் 12 தொடர் கருத்தரங்கங்களில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் 10வது இணைய கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் நிதி சேவை அமைப்புகளின் திறன் என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது
இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, ரூபே மற்றும் யுபிஐ தொழில்நுட்பங்கள் குறைந்த செலவில் மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் என்பதை தாண்டி, சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளன. என்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால், யுபிஐ முறையை சர்வதேச அளவில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படுத்த முடியும். இந்தியாவின் நிதி நிறுவனங்கள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அதிகளவில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அதிக நபர்களுக்கு பயன்களை கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கடந்த மாதம் இந்தியாவின் யுபிஐயும், சிங்கப்பூரின் பெநவ் என்ற ஆன்லைன் பரிவர்த்தனை அமைப்பும் இணைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இருநாட்டவரும் தடையின்றி பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், தங்கள் நாடுகளில் இருந்து வணிக கட்டணங்களை யுபிஐ மூலம் பயன்படுத்த அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவின் சில்லறை பணப்பரிமாற்றத்தில் யுபிஐ மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிக வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜி-20 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் யுபிஐ சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.