தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்-அப்-தென்காசி என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பாஜக வெளிமாநில மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர், எஸ்.ஜி சூர்யா, ஜோகோ (zoho) நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு இளம் தொழில் முனைவோருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் காணொலி மூலம் கலந்து கொண்டு இளம் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளை வழங்கினார். இதற்கு முன்னால் இந்தியா நுகர்வு கலாச்சாரத்தில் இருந்தது என்றும் தற்போது அந்த நிலை மாறி மற்ற நாடுகளுக்கு தொழில்நுட்பங்களை வழங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்தார். இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாகவும் அவர் கூறினார்
இதனை தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீதர் வேம்பு, பொருளாதார நிலையை உயர்த்தி கொள்வதன் மூலம் சமுதாயம் சிறந்து விளங்கும் என்றும் நாடும் முன்னேறும் என்றும் தெரிவித்தார். மேலும் தென்காசியை முன்னேற்ற எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்கள் நான் வேலை தேடுவேன் என்ற நிலையிலிருந்து வேலை கொடுப்பேன் என்ற நிலைக்கு மாற வேண்டும் என்றும் இதனையே பிரதமர் மோடி அடிக்கடி தெரிவிப்பதாகவும் கூறினார். இளம் தொழில் முனைவோருக்கான இந்நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த தொழில்முனைவோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி நாட்டின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நகரங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றும் பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் முயற்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுபோன்ற முயற்சிகளால் இந்தியாவின் வளர்ச்சிக்கு மூன்றாம் கட்ட நகரங்களும் தங்களது பங்களிப்பை நல்கும் என அவர் கூறியுள்ளார்.