
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்
ஆன்லைன் ரம்மி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கிறது. சட்டரீதியான சில விளக்கங்களை ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். பட்டியலின மக்களுக்கு கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.1000 கோடிக்கு மேல் செலவு செய்யப்படாமல் இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில், 30% செலவு செய்யாத அரசை சமூக நீதி அரசு என எப்படி சொல்ல முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பஞ்சமி நிலங்களை மீட்க தனியாக ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். கடந்த ஆண்டு இதேபோன்ற கோரிக்கையை வைத்த போது பரிசீலனை செய்வோம் என கூறிவிட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மகாராஷ்ட்ராவை போல தமிழ்நாட்டிலும் இதுபோன்று சட்டத்தை இயற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் மகளிர் உரிமை தொகை அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் என அறிவித்து விட்டு தற்போது தகுதியுடைய மகளிருக்கு மட்டும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அந்த தகுதி என்னவென்பது இதுவரை வரையறுக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தை சார்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களில் பெரும்பாலானோர், தங்களது வருமானத்தை டாஸ்மாக்கில் தொலைப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இளம்விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எந்த ஒரு ஆண்மகன் டாஸ்மாக்கில் அதிகமாக செலவு செய்கிறார்களோ அவர்களது குடும்பங்களுக்கு தான் முதலில் உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் கூறினார்
விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதன் மூலம் அவர்கள் விவசாயம் செய்வதற்கு வசதியாக இருக்கும். விவசாயிகளுக்கான நிதிநிலை அறிக்கையில் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்குவது, வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது, புதிய தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.எனவே இவற்றை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும்
அரசியல் கட்சிகள் விமர்சனங்களை வைப்பது, ஊடகங்கள் விமர்சனங்களை வைப்பதும் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கூட தமிழக அரசை விமர்சித்து பதிவு போடுபவர்கள் ,சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் பதிவு போடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
பிரதமர் மோடியை விமர்சித்ததால் மட்டுமே ராகுல்காந்தி கைது செய்யப்படவில்லை. மோடி என்பது ஒரு சமுதாயத்தினுடைய பெயர். மோடி என்ற பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்கள் என்று பேசிய ராகுல்காந்தி, குறிப்பிட்ட சமுதாயத்தை, சாதியை இழிவுபடுத்தி பேசியுள்ளார் என்பது தான் அடிப்படை பிரச்சனை. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி யாரையும் சாதி, மத, மொழி ரீதியாக விமர்சிக்க முடியாது. இதன் அடிப்படையிலேயே ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.