தமிழகத்தில் கோடைகாலம் பிறந்துள்ள நிலையில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் பாஜகவினர் நீர், மோர் பந்தல்கள் அமைக்க மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு நிலையிலும் மக்களுக்கு தொண்டு செய்வதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் முதன்மையானவர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
கோடை காலம், சுட்டெரிக்கும் வெயில், இது மக்களை வாட்டும் காலம் மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலும், மக்களின் களைப்பை போக்கும் வகையிலும், ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள், அமைப்பது, பழங்கள் வழங்குதல் போன்ற சேவைகளை பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆண்டுதோறும் புரிந்து வருவது வழக்கமான ஒன்று.
அதேபோன்று கோடை காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள், அனைவரும் முழு வீச்சில் ஈடுபட வேண்டும்.
அந்த தண்ணீர் மோர் பந்தல்களை தினசரி பராமரிக்க வேண்டும். மக்கள் தேடி வந்து பயன்படுத்துமாறு அங்கு நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.