இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம்.100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட நம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டு இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார்.
இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் அண்மையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு நடத்தினார்.
பழைய நாடாளுமன்ற கட்டிடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் இந்த புதிய நாடாளுமன்றத்தை கட்டி வருகிறது. ராஜபாதை சீரமைப்பு மற்றும் துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் ஆகிய புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவு உண்ணும் அறை, விசாலமான வாகன நிறுத்தும் பகுதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மக்களவையில் தற்போதைய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. அந்த, 543 பேரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆங்கிலோ இந்தியன் வகுப்பைச் சேர்ந்த இருவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும். தற்போதைய மத்திய அரசு சென்ற ஜனவரி 2020 அன்று, 104 வது சட்ட திருத்தம் மூலம், அந்த நடை முறையை நீக்கியது.
அதேபோல மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. அதில், 233 பேர் மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மீதமுள்ள 12 பேர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுவார்கள்.
நம் நாட்டில் இதுவரை நான்கு முறை தொகுதிகள் சீரமைக்கப் பட்டு உள்ளன. 1952, 1963, 1973, 2002 என நான்கு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தொகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மக்கள் தொகையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வேண்டும்.
இது குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. 1976 ஆம் ஆண்டு அமல்படுத்த வேண்டியது. ஆனால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியின் போது, இதை அமல்படுத்தாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விகிதம் இருந்தது. காலப் போக்கில், தற்போது பீகாரில் 25 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எனவும், மத்திய பிரதேசத்தில் 30 லட்ச வாக்காளர்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எனவும், நாடு முழுவதும் ஏறத்தாழ 20 முதல் 25 லட்சத்திற்கு, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எனவும் இருக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பது விதி. எனவே அதற்கேற்ப நாடாளுமன்றமும் மாற்றி அமைக்க வேண்டிவரும்.
இந்நிலையில் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வகையில், இரு அவைகளிலும் சேர்ந்து, 1272 உறுப்பினர்கள் அமரும் வகையில் புதிய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டின், பாரம்பரிய வரலாற்று சிறப்பம்சங்கள், மைய மண்டபத்தில் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நமது தேசிய பறவையான மயில் போலவும், மாநிலங்களவையில் நமது தேசிய மலரான தாமரை போலவும், பொதுவான மைய அவை நமது தேசிய மரமான ஆலமரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இயங்கும் பழைய பாராளுமன்றத்தில் இரு உறுப்பினர்கள் இடையே உள்ள இருக்கையின் இடைவெளி, 40 முதல் 50 சென்டி மீட்டர் மட்டுமே. அந்த இருக்கைகளின் இடைவெளி இப்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், உறுப்பினர்களுக்கு அருகாமையில் ஒரு மேஜை இருக்கும். அதில், தங்களுடைய பொருட்களை உறுப்பினர்கள் வைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பத்துடன், விசாலமான பார்க்கிங் வசதியுடன், நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதை தாங்கும் சக்தியுடன், அனைத்து சிறப்பு அம்சங்களையும் நினைவில் கொண்டு கட்டப்பட உள்ளது.
பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்கள், ஒரே குடையின் கீழ் செயல்படும். அனைத்து முக்கிய அலுவலகங்களும் அருகருகே இருப்பதால், நேர விரயமும், வீண் அலைச்சலும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, ஏலத்தின் மூலம் டாடா கட்டுமான நிறுவனம் எடுத்து செய்து வருகிறது.
தற்போது உள்ள பாராளுமன்ற வளாகம், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்போது உள்ள தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்டு உள்ளது. தற்போது பல தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன. நிலம் நடுக்கத்தை தாங்கும் வகையிலும், நவீன தொழில் நுட்பத்துடன், பல்வேறு வசதிகளுடன், அடுத்து பல வருடங்களுக்கும் தாங்கி நிற்கும் படியாக, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பல மொழி பேசுபவர்களும் இருப்பதால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, அவரவர் விரும்பும் மொழிகளில், கேட்கும் வகையில், பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும், அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருப்பதால், வேலைகள் சீக்கிரம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
பல்வேறு அலுவலக கட்டிடங்கள், தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. இதற்காக ஆண்டு தோறும், ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படுகின்றது. புதிய கட்டிடத்தின் மொத்த தொகையே ஆரம்பத்தில் மதிப்பிட்டபடி ரூ.927 கோடி தான். எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான செலவு நியாயமான செலவு என்றும், வாடகை, இடம் பற்றாக்குறை, காலம் வீணடிப்பு உட்பட அநாவசிய விஷயங்களை தவிர்க்கின்ற, லாபகரமான ஒரு திட்டம் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் நாடாளுமன்ற வளாகம், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு மற்ற பணிகளுக்கு பயன் படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு கட்டிடம் தேவையா? என்றெல்லாம் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. உண்மையில் இந்த கட்டுமானம் மூலமாக, 2000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 9000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்தன.
முந்தைய திமுக ஆட்சியில் இலவசமாக தொலைக் காட்சியை தருவதற்காக, ரூ. 3,742 கோடி செலவிடப்பட்டது. அப்போது அதை யாரும் தட்டி கேட்கவில்லை. மக்களின் வரிப் பணத்தை கொண்டு, மக்களுக்கு சேவை செய்கின்றோம், என கூறினார்கள். அதன் மூலம், அரசுக்கு எந்த வருவாயும் இல்லை. ஆனால், புதிய வளாகம் மூலமாக, வருடத்திற்கு ஆயிரம் கோடி மிச்சமாகிறது. இதன் மூலம், நமது நாட்டிற்கு, பெருமளவில் வருமானம் ஏற்படும்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, ஜூலை 13, 2012 ஆம் ஆண்டு அன்றைய மக்களவை சபாநாயகர் மீரா குமார் , ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அதில், தற்போது உள்ள நாடாளுமன்ற வளாகம், மிகவும் பழமை வாய்ந்தது எனவும், 2026 ஆம் ஆண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் போது, இது போதுமானதாக இருக்காது எனவும், புதிய கட்டிடத்தை கட்ட ஆவண செய்ய வேண்டும் எனவும் கோரி இருந்தார். அந்த கடிதத்தினுடைய நகல், டைம்ஸ் நவ் நாளிதழில், சென்ற 2020 ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளி வந்தது.
சென்ற 2008 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி காலத்தில், புதிய தலைமைச் செயலகம் 12,000 சதுர மீட்டரில் கட்ட, செலவு செய்யப்பட்ட தொகை சுமார் 479 கோடியே 50 லட்சம். ஆனால், தற்போது 64,500 சதுர மீட்டரில், புதிய பாராளுமன்றம் வளாகம் கட்ட, மத்திய அரசு செலவு செய்துள்ள தொகை ரூ. 972 கோடி மட்டும்தான் .
புதிய வளாகம் தேவை என்பதை முன்பே உணர்ந்ததால் தான், தற்போதைய மத்திய அரசு, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றது. “வெள்ளம் வரும் முன்பே, அணை போட வேண்டும்” என்பது போல, எதிர் வரும் சூழ்நிலையை புரிந்து கொண்டு, முன்பே செயலாற்றும் அரசு தான், சிறப்பு வாய்ந்த அரசு. அதை புரிந்து, உணர்ந்து, செயல் படுத்தும் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, நிச்சயமாக பாராட்டுக்கு உரியதே.
மேலும் ஷ்ரம் சக்தி பவன் மற்றும் போக்குவரத்து பவனுக்குப் பதிலாக புதிய அலுவலக வளாகமும் இங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை காட்சிப்படுத்த ஒரு பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபமாக விளங்கும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, ஒரு நூலகம், பல குழு அறைகள், உணவுப் பகுதிகள் மற்றும் போதுமான வாகன நிறுத்துமிடத்தையும் இது கொண்டிருக்கும்.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்தியாவின் புதிய வரலாற்றை எழுதப்போகும் நாடாளுமன்ற கட்டிடம் வெகு விரைவில் திறக்கப்பட உள்ளது.
கட்டுரையாளர்: டால்பின் ஸ்ரீதர், பாஜக மாநில துணை தலைவர்