காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என காங்கிரஸ் நிர்வாகி பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மேலும் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்து வருவது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
மோடி என்ற சாதி குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்.பி பதவி பறிபோனது.
இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் காங்கிரஸ் கட்சி ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கியதற்கு பாஜகவே காரணம் என்றும், திட்டமிட்டு அவரது எம்.பி பதவியை பறித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது
மேலும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மணிக்கூண்டுக்கு அருகே காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. அப்போது பேசிய அக்கட்சியின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம் என மிரட்டல் விடுத்தார். அவரது இந்த பேச்சை அருகில் இருந்த நிர்வாகிகள் கைகளை தட்டி ரசித்தனர்.
மணிகண்டனின் இந்த வரம்பு மீறிய பேச்சை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட பாஜக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன். மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல்துறையிடம் தங்களது புகாரை வழங்கினர்.
மேலும் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததற்கு கண்டனம் தெரிவித்ததுடன் உடனடியாக வழக்கு பதிவு செய்யவும் வலியுறுத்தினர்.