காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர்.பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளராகவும், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இவரை நேற்று சமூக விரோதிகள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை செய்தனர். தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்ற சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது எனவும் சாடியுள்ளார். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர்-1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் எனவும் வசைபாடியுள்ளார். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.