விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தை தொடர்ந்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி தருபவையாக உள்ளன. குறிப்பாக கள்ளச்சாராய விற்பனையில் திமுக பிரமுகர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதும், அவர்கள் திமுக அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதும் போன்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இதன்மூலம் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, காவல்துறை ஒத்துழைப்போடு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளது தெளிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தானும் தங்களது அமைச்சரவை பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டுமென தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த துயரச் சம்பவத்தில் மரூர் ராஜா என்கிற சாராய வியாபாரியின் பெயர் வெளிப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த மரூர் ராஜா அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
செஞ்சி மஸ்தானின் ஆசியோடு, அவர் கள்ளச்சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருந்தும் அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறை மெத்தனம் காட்டி வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேண்டிய மற்றொரு துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, முறையாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் போக்குவரத்து துறையில் வேலை வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக, வழக்குகளை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு டாஸ்மார்க் மூலம் தமிழ்நாடு சகோதரிகளின் தாலியை பறிப்பது போதாது என்று, கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் இந்த இரு அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.