தமிழ்நாட்டு விவசாயிகளிடம் இருந்து அமுல் நிறுவனம் நேரடியாக பால் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினரிடமிருந்து, அமுல் நிறுவனம் நேரடியாக பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு பால் கொள்முதல் செய்வது, நுகர்வோருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தியை பாதிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
14% மட்டுமே கொள்முதல் செய்யும் ஆவின்
இந்நிலையில் மு.க ஸ்டாலினின் இந்த கடிதத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் மொத்த பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 244 லட்சம் லிட்டராக உள்ள நிலையில், வெறும் 35 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதாக தெரிவித்துள்ளார். அதாவது மொத்த பால் உற்பத்தியில் 14 சதவீதத்தை மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்பதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவாரா ? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 2021 மே மாதத்துக்கு பிறகு இந்த பால் கொள்முதல் 32 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதற்கான ஸ்வீட் பாக்ஸ்களை முதலில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டதையும், தமிழ்நாடு பாஜகவின் போராட்ட அறிவிப்புக்கு பிறகு அது ரத்து செய்யப்பட்டதையும் சுட்டிகாட்டியுள்ளார். மேலும் கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து கிட்டுகளுக்கான பால்பவுடர்களை ஆவின் நிறுவனம் தயாரித்து தர முன்வந்தும், அதனை தமிழ்நாடு அரசு புறக்கணித்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தான் வழக்கமாக செய்யும் அரசியலை கைவிட்டுவிட்டு, ஆவினை இந்தியாவின் நம்பர்-1 கூட்டுறவு சங்கமாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளார். பால் கொள்முதலை அதிகரித்து, கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.