சென்னையில் நேற்று பாஜக ஆதரவு சமூக ஊடகவியலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பொன்முடி தன்னை நேரடி விவாதத்துக்கு அழைத்தது குறித்து பேசினார். அப்போது,’எனது மகன் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கும் பள்ளியில் படிக்கிறான். 5 மொழிகள் கற்று கொடுக்கும் பள்ளி இருக்கிறதா என நான் தேடி கொண்டிருக்கிறேன்.
பொன்முடி நேரடி விவாதத்துக்கு வரும் போது அவரது பேரன் எந்த பள்ளியில் படிக்கிறார் என்ற விவரத்தை நான் வெளியிடுவேன். திமுகவின் முதல் குடும்பம் முதல் அனைத்து குடும்பத்தை சார்ந்தவர்களும் படிக்கும் பள்ளி விவரங்களையும் வெளியிட முடியும். தமிழ்நாட்டில் இரண்டு எம்பிக்களுடைய குழந்தைகள் பெங்களூரில் கன்னட இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார்கள். குறிப்பாக தென் தமிழ்நாட்டில் தமிழ் தமிழ் என்று பேசும் ஒரு எம்பியின் மகன், பெங்களூரில் கன்னட இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார். அதே சமயம் தமிழ்நாட்டில் 36 ஆயிரம் பள்ளி மாணவர்கள் தாய்மொழி தமிழில் தோல்வி அடைந்துள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை என்று கூறினார்.
தமிழ்நாடு அரசு நீண்ட நாட்களாக இருமொழி கொள்கையை பின்பற்றி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. எனினும் மூன்றாவது மொழியாக இந்தியை கற்பிக்க வேண்டுமென நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்து வருகிறது. இந்த கோரிக்கை எழும் போதெல்லாம் இந்தி திணிப்பு என்ற ஒற்றை முழக்கத்தை முன் வைத்து அரசு பள்ளிகளில் இந்தியை அனுமதிக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
அதேசமயம், சிபிஎஸ்சி மற்றும் சர்வதேச பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்று கொள்ள முடியாத நிலை உள்ளது.