பாரதம் அகிலத்தின் உணவுக் களஞ்சியமாக உயர்ந்தோங்கி வருகிறது. அகிலத்தின் குருவாக உச்சம் பெறும் பாரதம் பல்வேறு நாடுகளுக்கும் அன்னபூரணியாக விளங்குகிறது என்றால் மிகையன்று. பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷாவும் தானியங்கள் நல்ல முறையில் சேமிக்கப்பட வேண்டும். செம்மையாக வினியோகிக்கப்பட வேண்டும், தானியம் வீணடிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
போதிய சேமிப்புக் கிடங்கு வசதியில்லாததால் திறந்தவெளியில் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. கனமழையின் போது இந்த நெல்மூட்டைகள் நனைந்து பாழாகிவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் தேனி போன்ற இடங்களில் தில்லுமுல்லு அரங்கேறுகிறது.
பாரதத்தில் ஆண்டுக்கு சுமார் 33 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நிகழ்கால நிலவரப்படி 14.50 கோடி டன் கொள்ளளவுடைய சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. மற்றவை உடனுக்குடன் விநியோகிக்கப் படுவதாக் கூறப்பட்டாலும், அதில் பாழாகிப் போகும் தானியங்கள் எக்கச்சக்கம். உணவு தானியங்கள் வீணாகக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பாரதம் முழுவதும் 7 கோடி டன் அளவில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட இருக்கின்றன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. வேளாண் அமைச்சகம், உணவு மற்றும் பொதுவினியோக அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் உள்ளிட்டவற்றின் திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட இருக்கின்றன.
பாரதம் முழுவதும் சுமார் 1 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 4453 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் உள்ளன.
முதல் கட்டமாக தேசம் முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் பரீட்சார்த்தமாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில் தேனி மாவட்டமும் ஒன்றாகும். போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவுடைய சேமிப்புக் கிடங்கு கட்டப்படவுள்ளது. இதற்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் தானிய சேமிப்புக் கிடங்கு கட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழி காட்டுதலில் நபார்டு வங்கி இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்த பிறகு ரூ.2 கோடி செலவில் விசாலமான சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தானிய சேமிப்புக் கிடங்கு கட்டப்பட இருக்கிறது.
இந்த முன்னோடியான திட்டம் விவசாயிகள் விளைவிக்கும் தானியங்களை உள்ளூரிலேயே பாதுகாப்பாக இருப்பு வைக்க வழிவகை செய்யும். இதனால் போக்குவரத்துச் செலவும் குறையும். வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதும் உறுதிப்படுத்தப்படும். தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக முதல் சேமிப்புக் கிடங்கு போடியில் அமைக்கப்படுவது தமிழகத்திற்கே பெருமை என்பது சிறப்பம்சமாகும்.
எத்தனையோ நல்ல விஷயங்களை தமிழகத்திற்கு தேடித் தேடி மத்திய அரசு செய்கிறது. மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. இதிலும் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கும். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– நிகரியவாதி