’தி இந்து’ எனும் ஆங்கில நாளேடு 1878ல் தொடங்கப்பட்டு இந்தியர்களின் குரலாக ஒலித்தது. விடுதலைப் போராட்ட காலத்திலும் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் ஒரு பக்கம் சாய்ந்த வரலாறு 1980கள் வரை இந்துப் பத்திரிகைக்கு இருந்ததில்லை. 1990களில் தொடங்கி இடது பக்கம் சாயத் தொடங்கியது இந்து. 2000 தொடங்கி குறிப்பாக என்.ராம் என்பார் முழுப்பொறுப்பை ஏற்ற பிறகு பெயருக்கு எதிராக இந்து தர்மத்துக்கு விரோதமாகவே கருத்துப் பேசத் தொடங்கியது இந்து. கம்யூனிசத்தின் பக்கம் சாய்வு என்ற நிலையில் இருந்து தீக்கதிரின் ஆங்கிலப் பதிப்போ என்று ஐயப்படும் நிலைக்கு வந்துவிட்டது. தி கிண்டு என்றும் சீனத்தின் சார்பு கண்டு சிண்டு என்றும் நடுவுநிலையாளரும் நல்லோரும் கேலி செய்யும் அளவுக்கு ஆனது இந்துப் பத்திரிகை.
இந்நிலையில் மாலினி பார்த்தசாரதி எனும் அம்மையார் கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று இந்து நிர்வாகக் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். காரணம் என்னவென்று கேட்டால் தனக்கான இடம் அங்கே சுருங்கிவிட்டது, அங்கே இருக்கத் இயலவில்லை என்கிறார். பத்திரிகையை ஆரம்பித்தவர்களில் ஒருவரான கஸ்தூரிரங்க ஐயங்காரின் கொள்ளுப் பேத்தியான மாலினி 2011 வரை நிர்வாக ஆசிரியராக இருந்து பின்னர் 2013ல் ஆசிரியராக பொறுப்பேற்றார். 2015ல் ராஜினாமா செய்த மாலினி தாம் கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார். தமது செயல்பாடுகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவதாகச் சொன்ன மாலினி தாம் ஆசிரியராக இருந்த காலத்தில் பல ‘பெரிய’ பத்திரிகையாளர்கள் இந்துவில் இருந்து கருத்து வேறுபட்டு வெளியேறியதை அனுமதித்தார். அதீத இடது சார்பை மாலினி ஆதரிக்கவில்லை.
மீண்டும் 2020ல் என்.ராம் வயது மூப்பில் பதவி விலகியபோது இந்து குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் மாலினி. இவரது பொறுப்பின் கீழ் பத்திரிகையில் சிற்சில மாற்றங்கள் செய்தாலும் இந்து தன் இடது சார்பை இழக்காதிருக்க அங்கே ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் சில விஷயங்களில் நடுநிலையை வலியுறுத்தி தம் பத்திரிகைப் பணியாளர்களையே கண்டித்துள்ளார் மாலினி. இது கடும் சர்ச்சைக்கும் சூடான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது.
ஜனவரி 2023ல் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மஹாபாரதத்தில் இருந்து தாம் சர்வதேச உறவுகள் குறித்துப் புரிதல் கொண்டதாகச் சொன்னதைக் கேலி செய்து இந்துவின் ஆனந்தன் எனும் துணை ஆசிரியர் “இந்துக் கடவுள்கள் எந்த ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணிக்குப் படித்துத் தேறினார்கள்” என்று கருணாநிதித்தனமாகக் கேட்டிருந்தார். இதைக் கண்டித்த மாலினி இந்தக் கருத்துக்கும் பத்திரிகைக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் 2021ல் பாரதப் பிரதமர் மோடியைச் சந்தித்து நோயைப் பொருட்படுத்தாமல் களத்தில் பணிசெய்வோரைப் பிரதமர் அங்கீகரித்ததைப் பாராட்டினார். இதைக் கண்டு வெகுண்ட என்.ராம் “இந்துவின் 142 ஆண்டுகாலப் பாரம்பரியம் பறிபோனது” என்று ட்விட்டரில் கதறினார். “பொதுப் பணிகள், கொள்கைகள் குறித்துப் பிரதமருடன் ஒரு கருத்தாழமிக்க பரிமாற்றம்” என்று மாலினி சொல்வது இந்துவின் பாரம்பரியத்துக்கு எதிரானது என்று பொங்கினார் ராம். மாலினி பதிலுக்கு “இந்துவில் 142 ஆண்டுகள் உண்மைகளை எழுதித்தான் நற்பெயர் பெற்றோம். அரசியல் சார்ந்தும் பாரபட்சம் கொண்டும் பெயரெடுக்கவில்லை” என்று பதிலடி தந்தார்.
சமீபத்தில் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் பிரதமருக்கு ஆதீனகர்த்தர்கள் செங்கோல் வழங்கிச் சிறப்பித்தனர். அது பற்றி எழுதிய தி இந்து, அரசின் அதிகார மாற்றத்தின் அறிகுறியாகச் செங்கோல் நேருவிடம் மௌண்ட்பேட்டனால் வழங்கப்பட்டது என்பது தவறான தகவல் என்று தெரிவித்தது. அது ஒரு தனிப்பட்ட பரிசு என்றது தி இந்து. துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அதை மறுத்து உண்மைய விளக்கினார். மாலினி தலையிட்டு குருமூர்த்தி சொல்வது உண்மை என்றால் இந்து தன் கருத்தைத் திருத்திக் கொள்ளும் என்றார். அதைக் கண்டித்த இடதுசாரிகள் பாஜக அரசை குஷிப்படுத்த மாலினி முயல்வதாகக் குற்றம் சாட்டினர். என்.ராம் பத்திரிகையாளர்களைக் கூட்டிவைத்து அரசின் பொய்யை அம்பலப்படுத்தப் போவதாக அறிவித்தார். கருத்தில் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதே நேர்மையான பத்திரிகையின் தர்மம் என்றார் மாலினி.
இந்நிலையில் சுரேந்திர தபூரியா என்பவர் இந்துவில் 1947ல் வந்த செய்தி என்று ஒரு படத்தை வெளியிட்டார். அதை மறுத்து இந்துவில் 1947ல் இந்துவில் வந்த விளம்பரம் என்று தெரிவித்த மாலினி அது குறித்த அன்றைய பத்திரிகையின் படங்களை வெளியிட்டார். இது செங்கோல் வழங்கப்பட்ட விஷயத்தை மறுக்க இடமில்லாமல் செய்தது. தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி “மாலினி சொல்வது சரி 11 ஆகஸ்டு அன்று முதல் பக்கத்தில் இந்துவில் விளம்பரம் வந்தது. ஆறாம் பக்கத்தில் செய்தியும் வந்தது” என்று திருத்தினார். மாலினி ஆமோதித்து ஆறாம் பக்கச் செய்தி குறித்த ஆதாரங்களைப் பகிர்ந்தார்.
அதுவரை புகைந்து வந்த இடதுசாரிகளின் கோபம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில் மாலினி விலகிவிட முடிவு செய்ததாக அறிவித்தார். அறிவிப்புக்குப் பிறகு மாலினியைப் பேசாத பேச்செல்லாம் பேசி “மோடியைப் பாராட்டுவதும், சந்திப்பதும், குருமூர்த்தி சொன்னதை ஆமோதிப்பதும், செங்கோல் கொடுத்தது உண்மை என்று சொல்வதும் இந்துவின் கொள்கைக்கு முரண்” என்று இடதுசாரிகள் பலரும் பொங்குகின்றனர். தேசவிரோத சக்திகள் பல கெக்கரிக்கின்றன. இடது பக்கம் சாயாமல் நிற்க முயன்ற பத்திரிகையின் உரிமையாளர்களில் ஒருவருக்கே இந்தக் கதி என்றால் உண்மை பேசும் வெளி நபர்களுக்கு என்ன கதி ஆகும் இந்துவில்?
எனது காலத்தில் இந்துவின் பாரம்பரியமான சார்பற்ற செய்தி வெளியீட்டுக்கும், பாரபட்சமற்ற கருத்துப் பரிமாற்றத்துக்கும் முயன்றேன். ஆனால் எனக்கான இடம் சுருங்கியபடியே இருந்தது. அதனால் தொடர்வதில் பொருளில்லை என்று சொல்லியிருக்கிறார் மாலினி. சற்றே ஊன்றிக் கவனித்தால் 1980களின் இறுதிக்கட்ட இந்துவின் நிலைக்கு தற்போதைய தறிகெட்ட இடதுசார்பு இந்துவை நகர்த்த மாலினி முயன்றதும் அதை இடதுசாரிகள் முறியடித்ததும் புரிகிறது. அறமென்றொரு பொருளில்லாமல் ஆள்வோருக்கு ஆதரவாகவும் விளம்பரங்களைச் செய்திகள் போல வெளியிடுவதிலும் பத்திரிகைகள் பலவும் ஈடுபட்டு வரும் இக்காலகட்டத்தில் திருந்த வாய்ப்பிருந்தும் மறுத்துவிட்டு இடதுபக்கம் சாய்ந்து பயணிக்கிறது இந்து. இருட்டினில் மறைக்கப் பார்த்தாலும் நீதி தன்னை வெளிப்படுத்தி வெளிச்சம் தரும் என்பது ஆன்றோர் வாக்கு. பலிக்கும், பார்த்திருப்போம். வந்தே மாதரம்.
– அருண்பிரபு