பாஜக தொண்டர்கள் மீது கை வைத்தால் திருப்பிக் கொடுப்போம்,” என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். .முதலவர் ஸ்டாலின் வெளியிட்ட கானொளியில் அவர் விடுத்த எச்சரிக்கை பற்றிய கேள்வி ஒன்றிற்கு அண்ணாமலை அவ்வாறு பதிலளித்திருந்தார்.
நேற்று 15.06.2023 மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை: ’முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட காணொளியில் வரம்பை மீறி பேசியுள்ளார். இது. செந்தில்பாலாஜி மீது, 2014ல் போடப்பட்ட வழக்கு.
இந்த வழக்கு அமலாக்கத்துறை இதற்கு முன் நடவடிக்கை எடுத்ததற்குக்கூட, தடை வாங்கி வைத்திருந்தனர். அந்தத் தடை இப்போது விலக்கப்பட்டு, செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர்.
சகோதரி கனிமொழி கைதின் போது கூட முதல்வர் இப்படி கோபப்படவில்லை. செந்தில்பாலாஜி கைதுக்கு கோபப்படுகிறார் என்றால், பொதுமக்கள் பேசுவது சரி தான். ‘தி.மு.க.,வின் கருவூலம்’ என்பது செந்தில் பாலாஜி தான்.
செந்தில் பாலாஜி கைதுக்குப்பின் முதல்வரின் நடவடிக்கை, ஒரு முதல்வர் நடந்து கொள்வதைப் போல இல்லை. அரசு நிர்வாகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர் சபரீசன் என்ற போது, அவர் எதற்காக செந்தில்பாலாஜியை பார்க்க, மருத்துவமனை சென்றார்?
முதல்வரின் பேச்சு, பாஜக தொண்டர்களை நேரடியாக மிரட்டுவதாக உள்ளது. நாங்கள் எதற்கும் தயாராகவே உள்ளோம். தி.மு.க., குண்டர்கள் வீதிக்கு வருவது, தமிழகத்திற்கு புதிது அல்ல. இப்போது பாஜக தொண்டர்களை குறி வைத்துள்ளனர்.
முதல்வருக்கு சவால் விடுகிறேன். பாஜக தொண்டர்கள் மீது கை வைத்து பாருங்கள். நிலைமை கைமீறினால் கோட்டைக்கு வருவோம். நீங்கள் கொடுத்தால் திருப்பிக் கொடுப்போம்.
நாங்கள் பழைய பாஜக அல்ல. ஊழல் செய்யும் அமைச்சர் மீது கோபம் காட்டாமல், பாஜக தொண்டர்கள் மீது கோபத்தை காட்டுவது என்ன நியாயம்?
டி.ஆர்.பாலு என் மீது தொடர்ந்த அவதுாறு வழக்கில், உரிய ஆவணத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன்.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்தால், பாஜகவுக்கு லாபம் தான். எனவே, எதிர்க்கட்சிகள் இணைவதை பார்த்து, பாஜக பயப்படவில்லை. எதிர்க்கட்சிகள் இணைவது நடக்கவே நடக்காது.
சென்னை மெட்ரோ ரயில் வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தால், முதல்வர் ஸ்டாலின் சிறை செல்வது உறுதி. எனவே தான் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும், என இப்போது மாற்றி இருக்கிறார்கள். சுதந்திர அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாகக்த்துறை நேர்மையாகத்தான் செயல்படுகிறது.” இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
************