பொது சிவில் சட்டம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி, பல்வேறு நிலைகளில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வரும் வேளையில், தேசிய சட்ட ஆணையம் அது பற்றி பொது மக்கள் கருத்தைக் கேட்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் மத்திய அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் அவசியம் என தெரிவித்திருக்கிறார். பிரதமரின் கருத்து, பாரதிய ஜனதா கட்சி, தனது துவக்க காலம் முதல் சொல்லி வரும் கருத்து தான். பிரதமரை தொடர்ந்து, கருத்தியல் உருவாக்க வல்லுநர்கள், மத்திய அமைச்சர்கள் எனப் பலரும் பொது சிவில் சட்டத்தின் தேவை பற்றி பேச, தேசிய அளவில் இது பற்றிய விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.
தங்களை தாராளவாத கட்சிகள் என்று கூறிக்கொண்டு, சமூகநீதி, பாலின சமத்துவம் என்றெல்லாம் கூப்பாடு போடும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் முதலான கட்சிகள் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதும், அக் கட்சிகளால் மதவாதக் கட்சி, பழமை வாதக் கட்சி என முத்திரை குத்தப்பட்ட பாஜக பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதும் இந்திய அரசியலில் ஒரு முரண் நகை.
பொது சிவில் சட்டத்தின் தேவை என்ன, நமது புரிதலுக்காக ஒரு சிறு பார்வை: இது நடந்தது 1985ல். உச்சநீதிமன்றம் தன்னுடைய புகழ்பெற்ற ஷா பானு வழக்குத் தீர்ப்பை வழங்கியது. ஒரு இஸ்லாமிய
ஆண் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவளுக்கு ஜீவனாம்சம் தருவதை நிறுத்திக் கொண்டார். அந்தத் தைரியம் மிகுந்த பெண் நீதிக்காகத் தொடர்ந்து அயராமல் போராடி உச்சநீதிமன்ற வாசலை அடைந்தார். இறுதியாக ஏப்ரல் 23, 1985 அன்று ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. ஜீவனாம்சம் கோரிய ஷா பானுவுக்கு அவர் வாழ்க்கைக்குப் போதுமான நிதியை தரவேண்டும் என்று உத்தரவிட்டது.
1985-இல் உச்சநீதி மன்றம் பொதுச் சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை மீண்டும் துவங்கி வைத்த போது பிரதமராக இருந்த ராஜீவ், தனது கட்சிக்கு 400 ற்கும் மேற்பட்ட எம்பிக்கள் இருந்த போதும் அந்த அரிய வாய்ப்பைத் தவற விட்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகும் வண்ணம் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்தார். இதில் தேச நலனை விட சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல் நலம் ஓங்கிவிட்டது. காங்கிரசின் இந்த சறுக்கல் நிரந்தரப் பிறழ்வாக மாறி அயோத்தி ஆலயம் எழுப்புதல், 370 நீக்குதல், முத்தலாக் சட்ட நீக்கம் என அனைத்திலும் சிறுபான்மை ஆதரவு என மாறி பெரும்பான்மை எதிர் பாக உருவெடுத்து விட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரும் மற்றவர்களும் விரைவில் இந்த நாட்டில் பொதுச் சிவில் சட்டம் அமலுக்கு வரும் என்று நம்பினார்கள்.
பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மலேஷியா, துருக்கி, இந்தோனேஷியா, எகிப்து ஆகிய நாடுகளில் பொது சிவில் சட்டம் நடைமுறை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது நல்லது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில், மிகப்பெரிய கம்யூனிஸ்ட் நாடானா சீனாவிலும் கூட சட்டம் அனைவருக்கும் சமமாக தான் இருக்கிறது என்பதை பொது சிவில் சட்டை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்வது நல்லது.
தற்போது நாட்டில் நிலவும் சூழலில் மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும் என்பதே தேசபக்தர்களின் நிலைபாடு.
-நானா