மதக்கலவரத்தை தூண்டும் வகையில், இந்து கடவுள் மற்றும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும், மனிதநேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
மணிப்பூர் கலவரத்தை மையமாக வைத்து, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேவையின்றி இந்து கடவுள்களையும், பாரத அன்னையும் அவமானம் செய்து வருகிறது. இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அதே போன்று மனிதநேய மக்கள் கட்சி என்ற போர்வையில் ஒளிந்துள்ளவர்கள், இந்து கடவுள் மற்றும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்துள்ளனர். இது பற்றிய பேனர் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டும், சாலைகளில் வைத்தும் அவதூறு பிரச்சாரங்ளை அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனிதநேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை கைது செய்யும் காவல்துறை, இந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்பவர்களை கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளை, தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-வ.தங்கவேல்