ஊழல் திமுக அரசு பட்டியலின மக்களின் நிதியை மடைமாற்றம் செய்வதா! அண்ணாமலை கண்டனம்.!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழல் திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையை, பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகளின் நலனுக்காகச் செலவிடாமல் திருப்பி அனுப்புவது திறனற்ற திமுக அரசின் வழக்கம். பட்டியலின சமுதாயத்தினருக்கன பள்ளிகள் மற்றும் விடுதிகளை மேம்படுத்துதல், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு போன்றவை எதுவுமே நிறைவேற்றாமல், சென்ற ஆண்டு மத்திய அரசு வழங்கிய சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் பட்டியலின சமுதாயத்தினர் நல நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியது திமுக.

ஆனால் தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக புதியதாக நிதி எதுவும் ஒதுக்காமல், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகளின் நலநிதியை மடைமாற்ற முயற்சித்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகள் நல நிதியை, பட்டியலின சமுதாய மக்கள் நலனுக்காக மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை மாதம் ₹1,000 ரூபாய் வழங்குவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து, பின்னர் தகுதி உடைய மகளிருக்கு மட்டும் என்று ஏமாற்றிய கூட்டம், தற்போது பட்டியலின சமுதாயத்தினர் நல நிதியைப் மடைமாற்ற முயற்சிப்பது என்பது, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, பிறர் மேல் பழி சொல்லி கைவிட்டுவிட்டு, தமிழக சகோதரிகளை முழுமையாக ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில்தான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

உடனடியாக, இந்தக் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகளின் நல நிதியை, அதற்கான நோக்கத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், அதைக் காரணமாகச் சொல்லி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கைவிடும் எண்ணம் இருந்தால், தமிழக சகோதரிகள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top