திருமணம் உள்ளிட்ட குடும்ப சுப நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்தும்படி, தன்னை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார்.
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகள் இருந்த மோடி, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவிகளில் தொடர்ந்து 21 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் தன் தாயார் மறைந்தபோது, சில மணி நேரங்களிலேயே இறுதி சடங்குககளை முடித்துவிட்டு வழக்கமான பணிகளை செய்யத் துவங்கியவர் பிரதமர் மோடி.
ஆனால், மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் பலர் தங்களின் இல்ல திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களிலும், மத்திய அமைச்சர்களின் இல்லங்களிலும் ஆயிரக்கணக்கானோரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பிரதமர் மோடிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகளின் திருமணத்தை, நெருங்கிய உறவினர்களை அழைத்து மிகவும் எளிமையான முறையில் நடத்தினார். இதனால் கட்சி அரசியலை தாண்டி அனைவரின் பாராட்டையும் அவர் பெற்றார் என்று கூறலாம்.
அதே சமயத்தில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சர்கள் சிலரது வீட்டு திருமணங்கள் ஆடம்பரமாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தன்னை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள், பாஜக முக்கிய தலைவர்களிடம், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்தினால், தொண்டர்கள், பொதுமக்களிடம் பல்வேறு வகையிலான சந்தேகங்கள் எழும்.
‘அரசியல்வாதிகள் என்றாலே மக்களுடன் நெருங்கி இருக்க வேண்டும். ஆடம்பரம் மக்களுக்கான இடைவெளியை அதிகரித்துவிடும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.