செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு, நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்கள் வீடுகளில் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) இரண்டாம் முறையாக கரூரில் 4 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக கரூர் மதுரை புறவழிச்சாலையில் உள்ள அம்பாள் நகரில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவர் வீட்டிலும், செங்குந்தபுரத்தில் சங்கரின் நிதி நிறுவனத்திலும் சோதனை நடத்தினர். சங்கர் கரூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அமலாக்கத்துறையினர் சென்ற போது வீடு பூட்டி இருந்துள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் காத்திருந்தனர். இதன் பின் வீட்டின் உரிமையாளர் நேமநாதன் என்பவரை வரவழைத்தனர். அவரிடம் மாற்று சாவி குறித்து கேட்ட போது அவர் தன்னிடம் இல்லை என கூறியதால் அவர் முன்னிலையில் பூட்டை பழுது பார்ப்பவரை வரவழைத்து மாற்று சாவியின் மூலம் கதவை திறந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அது தவிர சின்னாண்டான் கோயில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் கடை மற்றும் அதன் உரிமையாளர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் என்பவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மார்பில் கடையை கரூரில் நடத்துகிறார். இவர் கரூர் மட்டுமல்லாது காங்கேயம், தர்மபுரி இடங்களிலும் மார்பில் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதிக அளவில் இவர்கள் ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மார்பில் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் மூலம் பெரிய அளவில் நிலத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்களையும் அமலாக்கத்துறையினர் தேடி வருவதாகக் சொல்லப்படுகிறது.

இந்த சோதனை முடிவில் பல உண்மை தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. வேலை வாங்கித்தருவதாக செய்த பண மோசடி, மற்றும் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்த பணம் எங்கு சென்றது என்பன அனைத்து ஊழல்களும் வெளியே வரும்போது செந்தில் பாலாஜிக்கு நிரந்தரமாக சிறையில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top