ஆங்கிலேயர் காலத்து சட்டங்களில் முக்கிய மாற்றங்கள் – நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார் அமித்ஷா 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறைக்கு வந்த குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் மூன்று மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் தாக்கல் செய்தார். குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள இந்த மூன்று மசோதாக்களும், பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவை முறையே 1860, 1898 மற்றும் 1872ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த மூன்று சட்டங்களையும் மறுசீரமைக்கும் மூன்று மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ( 11.08.2023 )  லோக்சபாவில் தாக்கல் செய்தார்.

பழைய சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்படவுள்ள மூன்று மசோதாக்களுக்கும், பாரதீய நியாய சன்ஹிதா எனப்படும் இந்திய நீதித்துறை சட்ட மசோதா; பாரதீய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனப்படும் இந்திய மக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா; பாரதீய சாக்ஷ்யா எனப்படும் இந்திய சாட்சிகள் மசோதா என பெயரிடப்பட்டுள்ளது.

இவற்றை லோக்சபாவில் தாக்கல் செய்து, அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், குற்றவியல் நீதி அமைப்பு புத்துயிர் பெறும்.

வழக்குகளில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் நீதி கிடைக்கும்.

கும்பல் படுகொலைகள், சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத் தரவும் இம்மசோதா வழி செய்கிறது.

மேலும், முதல் முறை சிறு குற்றங்களில் ஈடுபடுவோருக்கான தண்டனைகளில் ஒன்றாக, சமூக சேவையில் ஈடுபடச் செய்யவும் இந்த மசோதாவில் விதிகள் உள்ளன.

பிரிவினைவாத செயல்கள், ஆயுத கிளர்ச்சி, நாசக்கார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற புதிய குற்றங்களையும் இது பட்டியலிடுகிறது.

இந்த மசோதாக்கள், நம் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த சபையில் என்னால் உறுதிபட கூற முடியும்.

நம்மை அடிமைப்படுத்தவும், தங்கள் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவுமே ஆங்கிலேயர்கள் குற்றவியல் தண்டனை சட்டங்களை கொண்டு வந்தனர். அதை தான் நாம் இன்று வரை பின்பற்றி வருகிறோம். ஆனால், இந்த புதிய மசோதாக்களின்
நோக்கம் தண்டனை வழங்குவதல்ல; நீதி வழங்குவதையே நோக்கமாக வைத்து இயற்றப்பட்டுள்ளன.

பழைய சட்டங்களை மாற்றி, இந்த மூன்று புதிய மசோதாக்களை நிறைவேற்றுவதன் வாயிலாக, நம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, பல்வேறு குற்றங்கள் பாலின- சமத்துவப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய ஜனநாயகத்தின் 70 ஆண்டு கால அனுபவத்தில், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட நம் குற்றவியல் சட்டங்களை விரிவாக மறு ஆய்வு செய்து, மக்களின் சமகாலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த புதிய சட்டங்களின்படி, வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். நிலைமைக்கு ஏற்ப, கால அவகாசத்தை மேலும், 90 நாட்களுக்கு நீதிமன்றம் நீட்டிக்கலாம். போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்து, 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

திருமணம், வேலை, பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக அல்லது அடையாளத்தை மறைத்து, பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது குற்றமாக கருதப்படும்.

கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு, 20 ஆண்டுகள் சிறை முதல், ஆயுள் தண்டனை வரை விதிக்க, இந்த சட்டங்கள் வழி செய்கின்றன. அதுவே, சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனை விதிக்கவும் விதிகள் உள்ளன.

கும்பல் படுகொலைகளுக்கு, ஏழு ஆண்டு முதல், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வரை தண்டனை விதிக்க வழி உள்ளது.

இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை உள்ளது. எனவே, தேசத் துரோக சட்டம் முற்றிலுமாக நீக்கப்படும்.

பயங்கரவாதம் என்பது, முதல் முறையாக சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இணையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதியின் சொத்துக்களை முடக்க, இந்திய நீதித்துறை சட்ட மசோதா வழி செய்கிறது.

அரசு வழங்கும் தண்டனை தள்ளுபடியை, அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மட்டுமே மாற்ற முடியும் என்றும், ஆயுள் தண்டனையை ஏழு ஆண்டுகளுக்குள் மட்டுமே குறைக்க முடியும் என்றும், புதிய விதிகள் இயற்றப்பட்டுள்ளன.

வழக்குகளில் தண்டனையை அதிகரிக்க, தடயவியல் அறிவியலை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனை விகிதத்தை 90 சதவீதம் ஆக்குவதே இந்த மசோதாக்களின் நோக்கம்.

இந்த மூன்று புதிய மசோதாக்களை, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top