புத்தகம் தூக்க வேண்டிய கைகளில் ஆயுதங்கள் ஏந்துவது மிகவும் வேதனையான நிகழ்வு என்று நாங்குநேரி சம்பவம் பற்றி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு சின்னத்துரை (17) என்ற மகனும், சந்திரா செல்வி (14) என்ற மகளும் உள்ளனர். சின்னத்துரை வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பும், சந்திரா செல்வி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னத்துரையும் சந்திரா செல்வியும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர். அன்றைய தினம் இரவு 10 மணியளவில் திடீரென அவர்களின் வீட்டுக்குள் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்தனர். அவர்கள் திடீரென சின்னத்துரையையும், சந்திரா செல்வியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது தாத்தா கிருஷ்ணன் (59) மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அரிவாளால் வெட்டியதால் காயம் அடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தக் கொலையில் திமுக ஒன்றியச் செயலாளரும் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அறிவாற்றல் மிக்க மாணவர்களாக உருவாக வேண்டியவர்கள் அரிவாளோடு அலைவது மிகுந்த மன வேதனையை தருகிறது. சாதிய வேற்றுமைகள் குறைய வேண்டும்.. களைய வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், குழந்தைகள் மனதில் இந்த சாதிய வேற்றுமை, சாதிய தீ பரவிக்கொண்டிருப்பது என்பது நமக்கெல்லாம் கொஞ்சம் கூட ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. கையில் புத்தகத்தை எடுத்துத் திரிய வேண்டியவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு திரிவது மிகுந்த வேதனை.. அதே ஊரில் சாதிய வேற்றுமை கொடுமைகளினால் 50 குடும்பங்கள் போய்விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. அப்படியென்றால் அங்கு எல்லாம் நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. காவல்துறையினர் இதையெல்லாம் ஏன் கண்காணிக்க மறுத்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் கண்டனங்கள், ஆதரவுகள் என்பதை தாண்டி, கட்சி எல்லைகளை தாண்டி.. அந்த ஊரில் என்ன நடப்பது என்பதை பார்த்துக்கொண்டு நம் ஊரில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க தவறிவிட்டோம்.
தம்பி நன்றாக படித்தார் என்பதற்காக வெட்டப்பட்டுள்ளார். அரசாங்கம் இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். அரசு மட்டுமின்றி பொதுமக்களும் இதை அறிய வேண்டும். மத்த ஊரை பற்றி நாம் கவலைப்படுகிறோம்.. மற்ற மாநிலங்களை பற்றி நாம் கவலைப்படுகிறோம். ஆனால் இங்கே என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் விடுகிறோம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
இந்த சாதிய வன்முறை பற்றி இது தான் தமிழகத்தில் ஈவேரா சாதியை ஒழித்த முறை என்று கோபம், வேதனையோடு பதிவிட்டு வருகின்றனர்.