தமிழக அரசு அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்காததால், ஆவின் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப் போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே 17-ம் தேதி அறிவித்தார்.
மேலும், அகவிலைப்படி உயர்வு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் ஆவின் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
இதே நிறுவனத்தில் அயல் பணியில் வந்துள்ளவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கவில்லை. அரசு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட போது, ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த சுப்பையன் அகவிலைப்படியை அதிகரித்து கோப்பு தயார் செய்துள்ளார். ஆனால், அதற்கு அரசு அனுமதி பெறப்படவில்லை.
தற்போது புதிய நிர்வாக இயக்குநராக வினீத் பதவியேற்றுள்ள நிலையில், முந்தைய கோப்பின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆவின் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆவின் ஊழியர்கள் கூறியதாவது: சென்னை ஆவின் தலைமையகம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் உள்ளிட்ட ஆவின் பால் பண்ணைகளில் மொத்தம் 1,200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.3,000 வரை அகவிலைப்படி தொகை கிடைக்கும். மற்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை உயர்த்தி வழங்கப்பட்டு விட்டது. ஆனால், எங்களுக்கு இன்னும் வழங்கவில்லை. மேலும், இது தொடர்பான கோப்பு அனுமதி புறப்படாமல் உள்ளது.
இது குறித்து ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத்திடம் கேட்டால், நிதிப் பிரச்சினையைக் காரணம் காட்டி, வழங்க மறுக்கிறார். அவர் மட்டும் அகவிலைப்படி உயர்வு வாங்கிவிட்டார். இது தொடர்பாக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திமுக எப்போதும் சொல்வதை செய்தது இல்லை, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியதை போன்று தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆவின் ஊழியர்களையும் ஏமாற்றி வருகிறது என்பதுதான் உண்மை.