நிலவின் தென்துருவ பகுதியில் ‘சந்திரயான்3’ இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணியளவில் தரையிறங்கி சாதனை படைக்க உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய மிகப்பெரிய சாதனையில் இதுவும் ஒன்றாக அமையும்.
விஞ்ஞானிகள், விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் சாமானியர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விண்ணுலக மர்மம் நிலவு ஆகும். நிலவை ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு பல வளர்ந்த நாடுகள் போட்டி போட்டு வருகிறது. அதிலும் நிலவின் தென்துருவம், விஞ்ஞானிகளின் ஆர்வத்தை தூண்டும் கவர்ச்சிகரமான ஒரு பகுதி என்று சொல்லலாம்.
இதற்கு காரணம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக வெளிச்சமே படாதப்பகுதி என்பதே. நிலவின் தென்துருவம் நிரந்தரமாக சூரியனுக்கு மறைவாகவே இருப்பதாக விஞ்ஞானிகளின் கூற்று. மேலும் இங்கு நிலவும் தட்பவெட்ப நிலை மைனஸ் 203 டிகிரி செல்சியசாக இருப்பதும் விஞ்ஞானிகளை ஆராய்ச்சி மேற்கொள்ள தூண்டும் முக்கியமான காரணியாகும். நிலவின் தென்பகுதியில் மிகப்பெரிய பள்ளங்கள், பாறைகள் இருப்பதும் இவை பல கிலோ மீட்டர் தொலைவு வரை பரவிகிடப்பதும் விஞ்ஞானிகளை பெரிதும் ஈர்த்த ஒன்று.
இந்த பள்ளங்கள் மிகப்பெரிய குளிர் பொறிகளாகும் அவை ஆரம்பகால சூரிய குடும்பத்தில் இருந்து ஹைட்ரஜன், நீர் பனி மற்றும் பிற ஆவியாகும் பொருட்களின் புதைபடிவ பதிவைக் கொண்டிருக்கின்றன. இவை பல கோடி ஆண்டுகளாக மாற்றங்கள் நிகழாமல் அப்படியே உள்ளது. ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் உருவானது தொடர்பான கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
நிலவின் தென்துருவத்தை அடைவதற்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இதில் முதல் வெற்றியை பதித்தது இந்தியா தான். 2008- ஆம் ஆண்டு சந்திரனை ஆராயச் சென்ற சந்திரயான்- 1 விண்கலம். நிலவின் தென் பகுதியில் உள்ள ஷேக்லெடன் பள்ளத்தில் வெற்றிகரமாக தடம் பதித்தது. ஷேக்லெடன் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பதையும் உலகிற்கு தெரியப்படுத்தியது. அதன் தொடர்ச்சியே தற்போது இஸ்ரோ செயல்படுத்திகொண்டு இருக்கும் சந்திரயான் – 3 திட்டம். வளர்ச்சி அடைந்த உலக நாடுகள் மத்தியில் வளர்ந்துகொண்டு இருக்கும் நாடான இந்தியாவின் நிலவு பயணம் என்பது உலக நாடுகளையே ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளது. இந்த சாதனை வரலாற்றில் பெரிய மைல்கல்லாக அமையும்.