என்ன செய்யப் போகிறார்கள் (லேண்டர்) விக்ரமும் (ரோவர்) பிரக்யானும் ?

சந்திரயான்-3 லேண்டர் (விக்ரம்) நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய பின் வெறும் 14 நாட்களுக்கு மட்டுமே ஆய்வுகள் நடக்க உள்ளன. அவை என்னென்ன ஆய்வுகள், அவற்றால் எந்த வகையில் பயன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும் விக்ரம் லேண்டர் முதல் சில மணி நேரங்களுக்கு ஒன்றுமே செய்யாமல் ஓய்வெடுக்கும். சுமார் 10 மீட்டர் உயரத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கீழே நிலவின் மேற்பரப்பில் விழுவதால் எழும் புழுதி அடங்கிய உடன் லேண்டரில் இருந்து சாய்வு தளம் ஒன்று திறக்கும். அதன் வழியாக ரோவர் (ப்ரக்யான்) நிலவில் மென்மையாக தரையிறங்கும்.

ரோவர் (ப்ரக்யான்) வெளியே வந்து அது தரையிறங்கிய பகுதியில் உலா வரத் துவங்கியதும் நிலவின் மேற்பரப்பில் இஸ்ரோவின் ஆராய்ச்சிகளும் ஆரம்பமாகும். ரோவர் மேற்கொள்ளும் ஆய்வுகளின் தரவுகளை லேண்டர் (விக்ரம்) பெற்று அதை பூமிக்கு அனுப்பி வைக்கும். ஒருவேளை லேண்டர் மூலம் தரவுகள் கிடைக்காமல் போனால் சிக்கலாகிவிடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் ‘இஸ்ரோ’ செய்துள்ளது. 

அதாவது லேண்டர் மூலம் ஆர்பிட்டருக்கும் தரவுகளை அனுப்பி, அதன் மூலமாகவும் தரவுகளை பூமியில் பெறும் வகையில் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விக்ரம் லேண்டரில் மொத்தம் நான்கு கருவிகளை பொருத்தி அனுப்பி உள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.  

இதில் முதலாவது, ‘ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பவுண்ட் ஹைப்பர்சென்சிடிவ் லோனோஸ்பியர் மற்றும் அட்மாஸ்பியர்’ என்ற கருவி. இதை ‘ரம்பா’ என்று ஈருக்கமாக அழைக்கின்றனர். விஞ்ஞானிகள்,

பொருட்கள் சராசரியாக திடம், திரவம், வாயு என மூன்றாகப் பிரிக்கப்படும். அவற்றை இன்னும் அதிகமாக வெப்பமூட்டினால் அவை ப்ளாஸ்மா என்ற மற்றொரு நிலையை எட்டும்.  நிலவில் காற்றுமண்டலம் இல்லை என்பதால் பகலில் அதீத வெப்பநிலையுடனும் இரவில் உறைபனிக் குளிரோடும் இருக்கும். நிலவில் மண் மாதிரிகளை எடுத்து அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ரம்பா ஆய்வு செய்யும், அதன் மூலம், நிலவின் காற்று மண்டலம் சாதாரணமாக உள்ளதா அல்லது மின் ஏற்றம் பெற்ற வளிமண்டலமாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதுடன், நிலவின் வயதையும் கணக்கிடவும் முடியம்.

அடுத்தது, ‘சந்திராஸ் சர்ஃபேஸ் தெர்மோ ஃபிஸிக்கல் எக்ஸ்பெரிமென்ட்’ எனப்படும். கருவி இதை ‘சேஸ்ட்’ என்று கருக்கமாக சொல்கின்றனர், விஞ்ஞானிகள், நிலவின் தென்துருவத்தில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, பகல் நேர வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டிருக்கிறதா அல்லது வெப்பத்தில் உடைகின்றனவா என்பது போன்ற தகவல்களைக் சேஸ்ட் கண்டறியும், நிலவின் தென் துருவ மண்ணில் வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்வதுடன், மண் கெட்டியாக உள்ளதா, அல்லது துகளாகவோ தூசுக்களாகவோ உள்ளதா என்பதையும் சேஸ்ட் ஆராயும்.

மூன்றாவது கருவி, “ஐ.எல்.எஸ்.ஏ.’ என அழைக்கப்படும் ‘இன்ஸ்ட்ருமென்ட் ஃபார் லூனார் ஸீஸ்மிக் ஆக்டிவிட்டி’. நிலவின் மேற்பரப்பில் இருக்கும் நில அதிர்வுகளை ஆராய்வதன் மூலம் பூமியைப் போலவே நிலவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு  இருந்தனவா என்பன போன்ற தரவுகளை ‘ஐ.எல்.எஸ்.ஏ’ சேகரிக்கும். எதிர்காலத்தில் நிலவில் மளிதர்கள் கட்டுமானங்களை உருவாக்கினால், அவற்றை நிலவில் உள்ள நிலம் தாங்குமா என்பதை அறிந்து கொள்ள ‘ஐ.எல்.எஸ்.ஏ.’ வின் ஆய்வு உதவியாக அமையும். நில அதிர்வுகள் இருந்தால் அதன் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்பட கட்டுமானங்களை வடிவமைக்கவும்கூட இது உதவும்.

நான்காவதாக உள்ளது. ‘எல்.ஆர்.ஏ.’ எனப்படும் ‘லேசர் ரெட்ரோ-ரிஃப்லெக்டர் ஆரே’ எனப்படும் கருவி. நிலா பூமியைச் சுற்றி வரும்போது அதன் இயக்கம் எப்படி உள்ளது; சீராக உள்ளதா அல்லது அதிர்வுகளுடன் சுற்றுகிறதா என்ற தகவல்களை ‘எல்ஆர்ஏ’ சேகரிக்கும். பூமியிடமிருந்து நிலா சிறிது சிறிதாக விலகிச் செல்வதாக விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில் தற்போது நிலா பூமியின் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது; ஆண்டுக்கு எவ்வளவு தொலைவு விலகிச் செல்கிறது என்பன போன்ற தகவல்களை எல்.ஆர்.ஏ மூலம் துல்லியமாகக் கண்டறிய முடியும்.

அடுத்தது. பிரக்யான் ரோவர். அதில் உள்ள முதல் கருவி, ‘எல்.ஐ.பி.எஸ்’ எனப்படும் ‘லேஸர் இன்டியூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப்’. மற்றதொரு கருவி, ‘ஏ.பி.எக்ஸ்.எஸ்’ எனப்படும் ‘ஆல்ஃபா பார்ட்டிகில்  எகஸ்-ரே ஸ்பெக்ட்டோமீட்டர்’. 

பொதுவாக, ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்பதால், ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கும், நிலவின் மண்ணுக்குள் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என எந்தெந்த தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும். நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் ஆய்வு செய்யும். 

சந்திரயான்-3 விண்கலனின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடைகொண்ட ரோவரில் உள்ள இரு கருவிகள்தான் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயானின் ‘விக்ரம்’ லேண்டர் மற்றும் ‘பிரக்யான்’ ரோவர் ஆய்வுகளை மேற்கொள்ளளவும் பூமிக்கு தகவல்களை அனுப்பவும் மின்சாரம் தேவை.  அந்த மின்சாரத்தை சூரிய மின் தகடுகளின் மூலம் இரு கலங்களும் உற்பத்தி செய்து கொள்ளும். சந்திரயான் 3 தரையிறங்கும் தென்துருவப் பகுதியில் ஒரு மாதத்திற்கு 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவு என்ற நிலையே உள்ளது. அதனால் 14 நாட்கள் பகல் இருக்கும் காலகட்டத்தை கணக்கிட்டு விண்கலத்தை அனுப்பி உள்ளது, இஸ்ரோ.

நிலவின் தென் துருவப் பகுதியில் இரவு வரும்போது வெப்பநிலை மைனஸ் 120 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும், அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டாலும் மின்சார உற்பத்தியைச் செய்யாததுடன் அவற்றின் பாகங்கள் சேதமடையவும் வாய்ப்புள்ளது. அதனால்தான் இவற்றின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே என்றும் முதல் 14 நாட்களில் கிடைக்கும் தகவல்களே நிலவுக்கு மனிநர்களை அனுப்பும் இந்தியாவின் எதிர்காலத் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

பூமியை விட நிலவில் ஈர்ப்புவிசை குறைவு இதனால் செவ்வாய் கிரகம் உட்பட மற்ற கோள்களுக்குச் செல்ல, நிலவில் இருந்து சிறிதளவு உந்துவிசை கொடுத்தாலே போதும். எரிபொருள் தேவையும் குறைவு. எனவே, நிலவில் ஒரு தளம் அமைத்து, அங்கிருக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வளங்களைப் பயன்படுத்தி விண்வெளிப் பயணங்களை, மேற்கொள்ளக்கூட வாய்ப்புகள் உண்டு. அதற்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் ஆய்வுகளில் கிடைக்கும் தரவுகள் மற்றும் தகவல்கள் முக்கியமானவை. 

இவை தவிர, லேண்டரை அழைத்துச் சென்ற ப்ரொபொல்ஷன் கலம், நிலவின் நீள்வட்டப் பாதையில் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கும். விண்வெளியில் உள்ள புறக்கோள்கள் தொடர்பாக ப்ரபொல்ஷன் கலம் சேகரிக்கும் தகவல்கள் எதிர்காலத்தில் உயிர்கள் வாழ ஏதுவான பூமியைப் போன்ற கிரகங்களை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நன்றி: பாலிமர் நியூஸ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top