மருத்துவ செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்பக் கேட்ட பெண்ணின் வீட்டின் மீது குப்பையை கொட்டியும், சிறுநீர் கழித்தும் தொந்தரவு செய்யும் கோவை மேயரின் குடும்பத்தினர் பற்றி வீடியோ ஆதாரங்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவை மணியகாரம்பாளையம் நட்சத்திரா கார்டனில் வசிப்பவர் சரண்யா. இவரது கணவர் கோபிநாத்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திமுகவைச் சேர்ந்த இவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகின்றனர். இரண்டரை ஆண்டுகளாக தற்போதுள்ள வீட்டில் வாடகைக்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் தங்கியுள்ள அடுக்ககத்தில் 4 வீடுகள் இருக்கின்றன. முன்புறம் உள்ள வீட்டில் கோபிநாத் குடும்பம் வசிக்கிறது. பின் வீட்டில் கோவை மேயர் கல்பனாவின் தாய் காளியம்மாள், மேயர் தம்பி குமார் வசிக்கின்றனர். கல்பனா மேயராவதற்கு முன்பு காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவுக்காக கோபிநாத்திடம் மேயரின் தம்பி குமார் ரூ.15,000 வாங்கியுள்ளார்.
அதில் 5,000 ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். 10,000 ரூபாயை கொடுப்பதற்கு முன் அவரது அக்கா கல்பனா கோவை மேயராகி விட்டார். கொடுத்த பணத்தை குமாரிடம், கோபிநாத் கேட்ட போது தகாத வார்த்தையால் திட்டி அனுப்பியுள்ளாராம் குமார்.
பல முறை கேட்டும் பணம் தராததால், கோபிநாத் அதை கேட்காமலே விட்டு விட்டார். ஆனால் குமார், கோபிநாத் குடும்பத்தை பல வழிகளில் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார். வீட்டில் இருந்த இரண்டு கேட்களையும் பூட்டு போட்டு வைத்துள்ளார். இதனால் கோபிநாத் தனது காரை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து மேயர் கல்பனாவும் அதே வீட்டில் குடியேறியுள்ளார். அதன் பின்னர் கோபிநாத் மீதான டார்ச்சர் மிகவும் அதிகமாக இருந்துள்ளது. கோபிநாத் வீட்டின் சமையலறை பின்புறத்தில் மீதியான சாப்பாடு, வெட்டப்பட்ட கோழிக்கழிவு போன்றவற்றை மேயர் வீட்டினர் கொட்டி வரலாயினர்.
அந்த கொடுமை எல்லாம் தாண்டி வாளியில் சிறுநீரைப் பிடித்து அதையும் கோபிநாத் வீட்டின் சமையலறைச் சுவற்றின் மீது குமார் கொட்டியுள்ளார். இவை அனைத்தையும் சிசிடிவி கேமரா மூலமாக கோபிநாத் குடும்பத்தினர் வீடியோ எடுத்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஆடியோ மற்றும் காணொளிகளை முதலமைச்சர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகாராக அனுப்பியுள்ளனர் கோபிநாத் குடும்பத்தினர். இந்தப் புகார் கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக நீதி, சமநீதி, திராவிட மாடல் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுப்பாரா அல்லது தங்கள் கட்சியை சேர்ந்தவர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்று கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமூக நீதியா, கட்சி நீதியா எது வெல்லும் என்பதை பார்க்க மக்கள் ஆவலாக உள்ளனர்.