விஞ்ஞானத்துக்கு தேசம் கிடையாதா ? எழுத்தாளர் மாலனின் நான்கு பதில்கள்

சந்திராயன் 3 ன்றின் இந்திய வெற்றியைத் தொடர்ந்து, இது இந்திய வெற்றி அல்ல மானுட வெற்றி என்றும், இவர்கள் தமிழர்கள் தமிழ் மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும், விஞ்ஞானத்துக்கு தேசம் கிடையாது என்றும் இந்தியாவின் வெற்றி கொண்டாட்டத்தை மடைமாற்று முயன்றவர்களுக்கு, எழுத்தாளர் மாலன் தனது நான்கு பதிவுகள் மூலம் நல்ல பதில்களை அளித்திருக்கிறார். இங்கே அவை: 

நம்மூர் நியாயங்கள்:  

நிலவின் வட துருவத்தில் சீன உலாவியை இறக்கிய போது அது மனித குல வெற்றியல்ல, சீனாவின் வெற்றி

சர்வேயர் 1 நிலவில் இறங்கிய போது அது மனித குல வெற்றி அல்ல. அது அமெரிக்காவின் வெற்றி

ரஷ்யாவின் லூனா செயலற்று விழுந்தால் அது மனித குலத் தோல்வி அல்ல. ரஷ்யாவின் தோல்வி

ஆனால் விக்ரம் தரையிறங்கும் போது அது மனித குல வெற்றியாகிவிடும்!

இந்தியா வெற்றி பெறுகிறது என்றால் இங்கே இருப்பவர்களுக்கு ஏன் எங்கெங்கோ எரிகிறது?

2. இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்..

அம்பேட்கரின் பெருமை அவர் இந்தியாவிற்காக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார் என்பது. அவர் மராட்டியர் என்பதால் மட்டுமல்ல

படேலின் பெருமை அவர் சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை வலிமைப்படுத்தினார் என்பது. அவர் குஜராத்தி என்பதால் மட்டுமல்ல

சுபாஷ் போசின் பெருமை இந்தியாவிற்காகப் படை திரட்டினார் என்பது அவர் வங்காளி என்பதால் அல்ல

விர முத்துவேல் உட்பட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான பெருமை அவர்கள் இந்தியக் கலத்தை நிலவில் இறக்கி வரலாற்று சாதனை படைத்தார்கள் என்பதால் ஏற்பட்டது

அவர்கள் எந்த மாநிலத்தவர் என்பதால் அல்ல. 

இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.

3 வெற்றிக்குக் காரணம் தமிழ் வழிக் கல்வியா ?  

வீர முத்துவேல், வனிதா, மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் தமிழர்கள், தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்கள் என்ற பதிவுகள் பல பார்த்தேன். 

வீர முத்துவேல் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் படித்தவர். ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் அந்தப் பள்ளி ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டத்தின் கீழ் கற்பித்து வந்தது. 2011 முதல் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது

வனிதா முத்தையா திருச்சி பாய்லர் தொழிற்சாலை பள்ளியில் படித்தவர். அது மத்திய அரசு நிறுவனம்அங்கு என்ன முறைக் கல்வி என உறுதியாகத் தெரியவில்லை. தமிழ் வழிக் கல்விதானா என்பதும் தெரியவில்லை (அங்கு படித்த எவரும் இருந்தால் தகவல்கள் தரலாம்)

இஸ்ரோ மத்திய அரசு நிறுவனம் என்பதால் இவர்கள் மூவருமே இந்தி கற்றிருக்கவோ, அறிந்திருக்கவோ வாய்ப்பு உண்டு.

மூவரும் தமிழர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களது தமிழறிவுக்காகவும் அல்ல. அவர்களது அறிவியல் ஞானத்திற்காகவும் அனுபவத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உதாரணமாக மயில்சாமி அண்ணாதுரை ஐந்து முனைவர் பட்டம் பெற்றவர். வீர முத்துவேல் எழுதிய சிறப்பான அறிவியல் கட்டுரை அவரை இந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது. வனிதாவும் அயலக இதழ்களால் பாராட்டப்பெற்றவர்.இதற்க்கெல்லாம் அறிவியல் அறிவோடு ஆங்கில அறிவும் வேண்டும். அதற்காக இந்த வெற்றி ஆங்கிலத்திற்குச் சேராது

இவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருந்தாலும் இந்தியாவின் பல மொழியினர், மாநிலத்தினர் இனத்தவர் இவர்களோடு உழைத்தனர். மணிப்பூரில் தங்கள் வீடு தீவிரவாதிகளால் புல்டோசரால் தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்த போதும் கூட இந்தத் திட்டத்திற்காக உழைத்த ஜேம்ஸ்- பிராணேஸ்வரி தம்பதி பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இன்னொரு உதாரணம் சந்திராயன் -2 திட்டத்தில் வனிதாவோடு ரிது கரிதால் என்ற பெண்மணியும் திட்ட இயக்குநராகப் இருந்தார். இஸ்ரோ இயக்குநர் ஒரு மலையாளி. இது போன்ற பெரிய திட்டங்கள் ஒரு நபரால் செயல்படுத்தப்படுபவன அல்ல என்பது கண்கூடு

சுருக்கமாகச் சொன்னால் இது இந்தியர்களின் வெற்றி. பல மொழிகள், பல இனங்கள், பல மாநிலங்கள் ஒன்றுபட்டு நின்று ஈட்டிய வெற்றி.

நம் விஞ்ஞானிகள் இதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழரா என்ற கேள்விக்கு வீரமுத்துவேல் அளித்திருக்கும் விடையைக் காணுங்கள். ( இணைக்கப்பட்ட காணொளியில் வீர முத்துவேல், ஒரு தமிழனாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 

இஸ்ரோ என்பது இந்திய தேசிய நிறுவனம், இங்கு மாநில,  மொழி வாரி பேதங்கள் இல்லை, எங்களுக்கும் இல்லை என தெளிவாகப் பதில் அளித்துள்ளார் ) 

4. விஞ்ஞானத்துக்கு தேசம் கிடையாதா ?

விஞ்ஞானத்திற்கு தேசம் கிடையாது என ஒரு நண்பர் ஒரு பதிவில் கருத்திட்டிருந்தார். இந்தியாவின் சந்திராயன் வெற்றி பற்றி நான் எழுதியதற்கான எதிர்வினைகளில் இது ஒன்று. அது மனிதகுலத்திற்கானதாம்.  

விஞ்ஞானத்திற்கு தேசம் இல்லாமல் இருக்கலாம். விஞ்ஞானிக்கு தேசம் உண்டு. 

விஞ்ஞானத்திற்கு தேசம் இல்லை என்பது கூட முற்றிலும் சரியானது அல்ல. விஞ்ஞானச் சோதனைகளுக்குப் பணம் வேண்டும். அதைக் கொடுக்க ஒரு அரசோ நிறுவனமோ வேண்டும், அவற்றுக்கு தேசம் உண்டு. 

விஞ்ஞானத்திற்கு தேசம் இல்லை என்றால் ஏன் அறிவு சார் சொத்துரிமை விதிகள்? ஏன் காப்புரிமை? ஏன் ராயல்டிகள்?

மின்சாரம், டெலிபோன், கார் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்தக் காப்புரிமைகள் காசு கொடுத்துதான் வாங்கப்பட்டன, இன்றும் காசு கொடுத்தால்தான் அவை கிடைக்கும். அணு உலையிலிருந்து ஆன்டி வைரஸ் வரை எல்லாவற்றுக்கும் காசு உண்டு.

விஞ்ஞானத்திற்கு தேசம் இல்லை என்றால் ஏன் ஒருநாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் வேறு சில நாடுகளில் ஏற்கப்படவில்லை?. 

சந்திராயன் 3 இந்தியா விண்வெளி ஆய்வின் முன்னணித் தேசம் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிறுவியிருக்கிறது. சந்திரன் குறித்த ஆய்வில் உலகில் அது முன்னோடி, குறிப்பாக அதன் தென் துருவ ஆய்வில் முதல் என்பது அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 140 செயற்கைக் கோள்களை ஏவி நம் ஆற்றலை நிரூபித்தோம். ஆகக் குறைந்த செலவில் செவ்வாயைச் சுற்றி வரமுடியும் என்பதை செய்து காட்டினோம். நிலவின் தென்துருவத்தை மட்டுமல்ல, புவியின் தென்துருவத்தையும் ஆராய்ந்து வரும் சில நாடுகளில் ஒன்று இந்தியா. கோவிட் தடுப்பூசியை இங்கேயே தயாரித்து 24 கோடி டோஸ்களை 101 நாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். 

இவையெல்லாம் இந்தியாவின் அறிவியல் வலிமைக்கான சான்றுகள். இந்தியாவின் ஆற்றலை எவரும் இனி குறைத்துப் பேச முடியாது. அலட்சியப்படுத்த முடியாது

அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, சீனமோ அறிவியலில் அடைந்த வெற்றிகளைப் போல அல்ல இந்தியா அடைந்த வெற்றி. உலக யுத்தத்தில் கண்டடையப் பெற்ற தொழில் நுட்பங்கள் எங்களுக்கு அப்போது கிடைக்கவில்லை. அன்று நாங்கள் அடிமைகள் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில் ஜெர்மானிய, யூத வல்லூநர்கள் குடியேறி வலிமை சேர்த்தார்கள். இங்கே அப்படி யாரும் வரவில்லை. ஐரோப்பாவில் நடந்த தொழிற்புரடசியின் கனிகள் எங்களுக்கு அப்போது கிடைக்கவில்லை. சீனத்தைப் போல அடிமைப்படாமல் இருந்த நாடு அல்ல இது.

ஒன்றல்ல, இரண்டல்ல, 500 ஆண்டுகள் அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தோம். அவர்கள் எங்களைச் சுரண்டிக் கொழுத்தார்கள். எங்கள் செல்வங்கள் கொள்ளை போயின. லட்சக்கணக்கானவர்கள் பட்டினியில் சாக, அவர்கள் எங்கள் தானியங்களை அள்ளிக் கொண்டு போனார்கள். ரத்தக் களரியில் நாங்கள் அடித்துக் கொண்டு சாக, ஒன்றரைக் கோடி மக்கள் இடம் பெயர, எங்கள் தேசத்தைப் பிரித்தார்கள். 

நூறாண்டுகளுக்கு முன் தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறி, கெட்டு, பாழ்பட்டு நின்ற தேசம் இது. 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் முதன் முதலாக அணுகுண்டு வெடித்த போது, “பஞ்சத்து ஆண்டிகளா உங்களுக்கு அணுகுண்டு கேட்குதோ?“ என்று கோபித்துக் கொண்டு உங்களுக்கு சூப்பர் கம்ப்பூட்டர் தரமாட்டோம், கிரொயோஜெனிக் எஞ்சின் தரமாட்டோம், உங்கள் மீது பொருளாதாரத் தடை என்றெல்லாம் உலகச் சண்டியர்கள் மிரட்டினார்கள். 

அந்தத் தடைகளையெல்லாம் தாண்டித்தான் இந்தியா இன்று அறிவியலில் வல்லவனாக எழுந்து நிற்கிறது. இன்று நாங்கள் பயன்படுத்தியது நாங்களே உருவாக்கிய கிரையோஜெனிக் எஞ்சின். நாங்களே உருவாக்கிய புரபல்ஷன் சிஸ்டம். 

அந்தப் பஞ்சத்து ஆண்டிகள்தான் இன்று உலகின் ஐந்தாவது பெரும் பொருளாதாரம். “இந்து வளர்ச்சி விகிதம்” என்று மேற்குலகு கேலி செய்த அதே 3 சதவீத வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால் கூட 2030ல் நாங்கள் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாவோம் என்று அதே மேலை நாடுகள் சொல்கின்றன. 

இந்த எழுபத்தி ஐந்து வருடத்தில் நாங்கள் இன்னொரு நாட்டை ஆக்கிரமித்தது இல்லை. இன்னொரு தேசத்தின் வளங்களைச் சுரண்டியதில்லை. (இது கொடுத்துப் பழகிய தேசம். கவலைப் படாதீர்கள், கோவிட் தடுப்பூசியைக் கொடையாகக் கொடுத்ததைப் போல நிலவுப் பயணத்தின் பலன்கலையும் கொடுப்போம்) ராணுவப் புரட்சிகளை எதிர் கொண்டதில்லை. உள்நாட்டுப் போரை உருவாக்கியதில்லை. குட்டையோ நெட்டையோ 70 வருடங்களாக எங்களை ஆளுவோரை நாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். 

நான் 1950ல் பிறந்தேன் அப்போது நாட்டில் வறுமை அதிகம். கல்வி குறைவு. சராசரி ஆயுள் குறைவு. தனிநபர் வருமானம் குறைவு. 1970க்கு முன் பிறந்தவர்களைக் கேட்டுப்பாருங்கள், பெரும்பாலோர் வீட்டில் போன் கிடையாது. இன்று வீட்டு வேலை செய்பவர்களிடம் கூடப் போன் உண்டு. அன்று பல வீடுகளில் கார் கிடையாது. இன்று நகரங்களில் வீட்டில் கார் நிறுத்த இடமின்றி தெருவில் நிற்கின்றன. அன்று திருநெல்வேலியில் இருப்பவர்கள் சென்னைக்குப் போய் வந்ததையே கூடப் பெரிதாகப் பீற்றிக் கொள்வார்கள், இன்றைக்குப் பல குழந்தைகள் கண்டம் விட்டுக் கண்டம் போய் வாழ்கிறார்கள். அவ்வளவு ஏன், அன்று ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவது, அதிலும் அங்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுவது பெரிய லக்சரி!

ஏழையாகப் பிறப்பது தவறில்லை ஆனால் ஏழையாகவே நீ செத்தால் அது உன் தவறு என்று ஒரு சொலவடை உண்டு. நான் ஏழை தேசத்தில் பிறந்தேன். ஆனால் நான் என் தேசம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக ஆவதைப் பார்க்காமல் சாகமாட்டேன். எங்கள் சந்ததியினருக்கு வலிமையான ஒரு தேசத்தைக் கொடுக்கத்தான் போகிறோம்

எங்களுக்கு பாட்டி நிலவில் வடை சுடுகிற கதைகளைச் சொல்லி சோறு ஊட்டினார்கள். நாங்கள் எங்கள் சந்ததியினருக்கு நிலவிற்கு விண்கலம் அனுப்பிய வரலாற்றைச் சொல்லுவோம்

எங்கள் தேசத்தின் சாதனைகளை அடுத்து வரும் தலைமுறைக்குக் கடத்த குறுக்கே நிற்காதீர்கள், சந்திராயன் எங்கள் வெற்றி. உங்கள் மனித குல மூட்டைகளை எடுத்துக் கொண்டு நகருங்கள்.

நன்றி:  மாலன் நாராயணன் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top