சந்திராயன்3 விண்கலம் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது. இதன் சோதனை ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மண், நாமக்கல் மாவட்டம் குன்னமலை, சித்தம்பூண்டி கிராமங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான்3 விண்கலம் 40 நாள் பயணத்துக்குப் பின்னர் நிலவின் தென்துருவத்தில் (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த சாதனை நிகழ்த்திய முதல் நாடு என்ற பெயரை இந்தியா பெற்றது. இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2019-ல் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியபோது, அங்கு தரையிறங்குவது தொடர்பாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்துக்கு, நிலவின் மேற்பரப்பில் உள்ள ‘அனார்த்தசைட்’ வகை மண் தேவைப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் நிலவின் மேற்பரப்பில் உள்ள அனார்த்தசைட் பாறை வகைகள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருந்து 50 டன் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதன்படி அனார்த்தசைட் பாறை மற்றும் மண் மூலம் அமைக்கப்பட்ட தளத்தில் ரோவர் வாகனத்தின் ஓடுதிறன் பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல தற்போது சந்திரயான்3 விண்கலத்தின் சோதனை ஓட்டத்துக்கும் இந்த மண் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வுக்கு குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி குன்னமலை கிராம மக்கள் கூறியதாவாது: சந்திரயான்-2 விண்கலத்தின் சோதனை ஓட்டத்துக்காக குன்னமலை, சித்தம்பூண்டியில் இருந்து மண் எடுக்கப்பட்டது. நிலவில் உள்ள மண்ணும், இங்குள்ள மண்ணும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த மண் சந்திரயான்-3 சோதனை ஓட்டத்துக்கும் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பதுடன் நிலவில் சந்திரயான்-3 லேண்டர் கலன் வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.