பல நாடுகள் தனது கொடியில் நிலவை வைத்திருக்கும் போது, நிலவில் தனது நாட்டுக் கொடியை நாட்டிய இந்திய விஞ்ஞானிகளின் மற்றும் நமது பாரதப் பிரதமரின் இந்த விஸ்வரூப வெற்றி, நமது வாரிசு அரசியல் மன்னர்களுக்கும், மன்னர் பரம்பரைக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்திருக்கும். விஞ்ஞான ஊழல் தெரியும், அது என்ன விஞ்ஞான விஸ்வரூப வளர்ச்சி. இந்த விஸ்வரூபம், உதிக்கும் சூரியனையே மறைத்துவிடுமோ என அச்சம் உதித்திருக்கும். இப்படி உதித்த எத்தனையோ அச்சத்தின் வெளிப்பாடுதான் இத்தனை பிதற்றல்களும், தவறுகளும். அதிலும் 20 பேர் ஒன்றாக கூடி ஒரு கோவிலுக்கு சென்றால் கூட பயம். எங்கும் பயம் எதிலும் பயம். மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம்.
ஒரு கோவிலுக்குச் சென்று ஒரு பிடி மண் எடுப்பதாலோ அல்லது ஒரு செடி நடுவதாலோ எந்த ஒரு சட்டப்பிரச்சனையோ அல்லது சம்பிரதாய ரீதியான பிரச்சனையோ வரப்போவதில்லை என்பது ஒரு சாமானியன் கூட அறிந்ததே. ஆனால் அது கூட தவறு என்று காவல்துறையை ஏவி, ஒரு பிடி மண் எடுக்க வந்தவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றால் இது என்ன விதமான ஆட்சி ?

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு பிடி மண் எடுக்கச் சென்றவர்களை காவல்துறை கைது செய்தது பற்றி, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் திரு.தனசேகர் அவர்களை நேரில் சந்தித்து விவரம் கேட்ட போது, “உலகம் போற்றும் உத்தமத் தலைவன் நரேந்திர மோடி அவர்கள் பல நல்ல திட்டங்களை தேசிய மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு டெல்லியில் ‘அமிர்தவனம்’ என்ற பெயரில் மிகப்பெரிய ஒரு பூங்காவை அமைத்து இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலத்திலும் இருந்து ஒரு பிடி மண் ஒரு செடி கொண்டு வந்து அந்த அமிர்தவனத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில் கடந்த 30-8-2023 அன்று வில்லிவாக்கம் சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட, புகழ்பெற்ற சிறப்பு வாய்ந்த அகத்தீஸ்வரர் சிவன் கோயிலில் ஒரு பிடி மண் எடுப்பதற்காக மாநிலத்தினுடைய செயலாளர் மரியாதைக்குரிய வினோஜ் பி செல்வம் தலைமையில் காலை 10 மணி அளவில் கோயில் வாசலிலே நாங்கள் எல்லாம் கூடினோம்.
காவல்துறையும் கோயில் நிர்வாகமும் மண் எடுப்பதற்கும் அனுமதி இல்லை, செடி நடுவதற்கும் அனுமதியில்லை என்று எங்களை விரட்டி அடித்தனர். நாங்கள் அமைதி காத்து பின்னர் இன்று ஆடி வெள்ளிக்கிழமை ஆகவே சிவபெருமானை வணங்கி விட்டு செல்கிறோம் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டோம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு 30 நிமிடம் எங்களை அலைக்கழித்து, கோயில் நிர்வாகமும் காவல்துறையும் சுவாமி தரிசனம் கூட செய்யக் கூடாது என்று எங்களை விரட்டி அடித்தனர். எனவே நாங்கள் அறவழி போராட்டம் நடத்தி கைதானோம்.

இந்துக்கள் வாழ்கின்ற நாட்டிலே இந்துக்கள் கோவிலில் சென்று கடவுளை வணங்க கூடாது என்று சொல்கின்ற ஒரு காட்டுமிராண்டி ஆட்சியானது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை, தலைவர் அண்ணாமலை தலைமையில் விரைவில் தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கும் காலம் வர இருக்கிறது. கைது செய்யப்பட்ட நாங்கள் அனைவரும் மாலை 5 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டோம். இந்த நிகழ்ச்சிக்கு, மாநில துணை செயலாளர் திரு வினோஜ் பி செல்வம் அவர்கள் தலைமை ஏற்று வழி நடத்தினார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பான முறையில் எங்களுடைய உணர்வை வெளிப்படுத்தினோம், என்று கூறினார்.
இந்நிகழ்வு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வினோஜ் பி செல்வம், “டெல்லியில் அமிர்த வனம் அமைத்து நாட்டை மண்ணின் மூலம் ஒருங்கிணைக்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் திமுக அதன் பிளவுபடுத்தும் சித்தாந்தத்துடன் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று பார்க்கிறது! பாஜகவினர் அகத்தீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
குரங்கு தானும் கெட்டு தனது வனத்தையும் கெடுக்குமாம். அது போல இந்த விடியா அரசு, சனாதனதர்மத்தை தானும் கடைப்பிடிக்காமல், கடைபிடிப்பவர்களையும் கடைபிடிக்க விடாமல், இந்துக்களின் அடிப்படை உரிமைகளை கூட பறித்து, இந்துக்களை அறவே ஒழிக்க திட்டமிட்டு போடும் இந்த அராஜக ஆட்டம் விரைவில் மறையும் என்று தேச பக்த பாஜகவினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
– வழக்கறிஞர், புவனேஸ்வரி