தமிழகத்தில் வாழும் பட்டியல் இன மக்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திமுக அரசு திருப்பி அனுப்பியதை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் பாஜக பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் போராட்டம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 6) நடைபெற்றது.
தமிழகத்தில் பட்டியலின மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை. மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்துக்கு மடை மாற்றம் செய்யப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், திமுக அரசின் செயலைக் கண்டிக்கும் விதமாக பாஜ பட்டியல் அணி சார்பில் திமுக அரசுக்கு பிச்சை அளிக்கும் நூதன போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (செப்டம்பர் 6) நடந்தது. பாஜ பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.
போராட்டத்தின் போது, உண்டியல் குலுக்கி பிச்சை பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் இதே போன்று போராட்டம் நடைபெறுவதற்கு திமுகவின் அரசின் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நோக்கத்திலேயே போலீசார் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 3 ஆயிரம் பாஜக பட்டியல் அணியினர் கைதாகினர்.
இந்த போராட்டம் பற்றி பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமி கூறியதாவது: பட்டியல் சமூக மக்களின் கல்வி பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசு வருடம்தோறும் நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.1.12 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2022,23ம் நிதியாண்டில் மாநில அரசுக்கு எஸ்.சி., எஸ்.பி. திட்டத்தின் கீழ் ரூ.16 ஆயிரத்து 442 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் கடந்த டிசம்பர் வரை ரூ.5 ஆயிரத்து 97 கோடி மட்டுமே செலவு செய்துள்ளனர். மீதமுள்ள 10 ஆயிரத்து 466 கோடி செலவு செய்யாமல் உள்ளது. பட்டியல் சமூக மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர். இந்த சமத்தில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை செலவு செய்யாமல் ஏமாற்றியுள்ளது வேதனை அளிக்கிறது. மாணவிகளின் தங்கும் விடுதிகள் தரமற்ற நிலையில் உள்ளன.
அங்கு வழங்கப்படும் உணவும் தரமற்று உள்ளது. இதனால் அங்கு தங்கி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது தவிர பட்டியல் இன மக்களுக்கு உரிய வசிப்பிடம், சுடுகாடு ஆகிய வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படாமல் உள்ளனர். வாங்கிய கல்விக் கடனை கட்ட முடியாமல் பட்டியல் இன மாணவர்கள் பரிதாபக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த நிதியை திமுக அரசு தங்களது சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருகிறது. சமூக நீதி பேசும் திமுக அரசு, பட்டியல் இன மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை முறையாக செலவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
கடந்த காலங்களில் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதியில் இலவச டீவி கொடுத்து ஏமாற்றிவிட்டனர். இதனை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2010ல் கண்டித்துள்ளது. இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். எனவே இதற்கு துணை போகும் ஆதி திராவிட நலத்துறையும், அரசையும் குற்றவாளியாக கருதி விசாரணை நடத்தத வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.