டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் பிரமாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் (நாளை) செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானில் உள்ள பாரத் மண்டபம் நுழைவு வாயிலில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மிக பிரமாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினர் ஏழு மாதங்களில் உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி – 20 உச்சி மாநாட்டுக்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.