தமிழகத்தில் இந்துக்களுக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருப்பதா இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் மக்கள் எழுச்சியோடு சிறு சிறு கிராமங்களிலும் மாநகரங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்து மக்கள் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி தமிழகமெங்கும் தங்களை விமர்சித்ததாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.
செய்யாறு விநாயகர் விழாவில் சனாதனத்தை விமர்சித்த ஸ்டாலின், உதயநிதி ஆகியோரைக் கண்டித்து பேசியதற்காக, இந்து முன்னணி மாநில செயலாளர் திரு.மணலி மனோகர் அவர்களையும், ஆரணியில் சனாதனத்தை இழிவுபடுத்திய உதயநிதியை கண்டித்ததற்காக வேலூர் கோட்டத் தலைவர் திரு.மகேஷ் அவர்களையும் பயங்கரவாதிகளை கைது செய்வது போல் இன்று ( 25.09.2023 ) அதிகாலை கைது செய்துள்ளனர். அவர்கள் திமுக தலைவரையும் அவரது கொள்கைகளையும் விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கருத்து சுதந்திரம் என்பது உள்ளதா? எந்த ஒரு நபரையும் அவர்களது கொள்கைகளையும் விமர்சிக்க ஜனநாயகத்தில் உரிமை உண்டு. அவ்வாறு இருக்க திமுக அரசு திமுக தலைவர்களை விமர்சித்ததாக அவர்களின் செயல்பாடுகளை விமர்சித்ததற்காக கைது செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.
தமிழகத்திலே பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களை தரக்குறைவாக விமர்சித்தவர்கள் மீது வழக்கு இல்லை, நடவடிக்கை இல்லை புகார் அளித்தும் கண்டு கொள்வதில்லை.
இந்துக் கடவுள்களை இழிவு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்து நம்பிக்கைகளை புண்படுத்துபவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் தங்கள் மீது விமர்சனங்களை அதுவும் நியாயமான விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாத இந்து விரோத திமுக அரசாங்கம் ஜனநாயகத்தை புறந்தள்ளி அடக்குமுறையை ஏவிவிட்டு இந்து முன்னணி பொறுப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்வதும், கைது செய்வதும் கடும் கண்டனத்துக்குரியவை.
இது ஏதோ தமிழகத்தில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதைப் போன்ற அசாதாரண சூழ்நிலையை தோற்றுவிக்கின்றது. உடனடியாக திமுக அரசாங்கம் கைது செய்யப்பட்ட இந்து முன்னணி மாநில செயலாளர் திரு.மனோகர் அவர்களையும் வேலூர் கோட்டத் தலைவர் திரு.மகேஷ் அவர்களையும் விடுவிக்க வேண்டும்.
திருச்சி மாவட்டம், முசிறியில் திரு.பாண்டியன் என்பவர் மீதும் துவரங்குறிச்சியில் திரு.தண்டபாணி மீதும், சேலம் கோட்ட தலைவர் திரு.சந்தோஷ் அவர்களையும், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தென்காசியில் மாநில துணைத் தலைவர் திரு.வி.பி.ஜெயக்குமார் உட்பட 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் விநாயகரை ஏற்றி சென்ற வாகனங்கள் மீது மிகப்பெரிய அபராதத் தொகையானது விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பந்தலூர் அருகே உள்ள நெய்குண்ணம் என்னும் ஊரியல் விநாயகர் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் நடந்த இரண்டு நாட்களாகியும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் விநாயகரை வழிபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை இந்து விரோத திமுக அரசு எடுத்து வருகிறது.
வி.களத்தூரில் விநாயகர் கோவிலுக்குள் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய சிலையை காவல்துறை அத்துமீறி கைப்பற்றியதோடு , உள்ளே நுழைந்து பெண்களை தாக்கி மானபங்கப்படுத்தி சிறுவர்களை எல்லாம் கைது செய்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அராஜகம் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிலே பேசினார்கள் என்பதற்காகவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ராஜேஸ்வரர் உட்பட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசு தன் மீது வரக்கூடிய விமர்சனங்களை தாங்க முடியாத இந்து விரோத அரசாக இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதும் மற்றும் தமிழகத்திலே விநாயகர் சதுர்த்தியை ஒட்டி போடப்பட்டிருக்க கூடிய வழக்குகள் அத்தனையும் ரத்து செய்ய வேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று இந்து முன்னணி கோருகின்றது. திமுக அரசின் இந்த இந்து விரோதப் போக்குத் தொடருமானால் திமுக அரசை கண்டித்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த ஆலோசித்துள்ளோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.