சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என பேசிய உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சார்பில் சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு, சனாதனத்தை எதிர்த்தால் போதாது, அதனை ஒழிக்க வேண்டும்’ எனப் பேசினார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளனர். அதன்படி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர், வினித் ஜிண்டால் புதிய மனு ஒன்றைை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது; ஹிந்து மதத்துக்கு எதிராகவும், சனாதன தர்மத்துக்கு எதிராகவும் உதயநிதி மற்றும் திமுக தலைவர்கள் கூறி வரும் கருத்துக்கள், என் போன்ற ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளன. இனப்படுகொலையை தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளது, வெறுப்பு பேச்சாகும்.
வெறுப்பு பேச்சு தொடர்பான ஒரு வழக்கில், கடந்த ஏப்ரல் 28ல் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக மாநில அரசும், காவல்துறையும் தாமாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உதயநிதி பேசிய விவகாரத்தில் இதுவரை எந்த வழக்கும் மாநில போலீசாரால் பதிவு செய்யப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். உடனடியாக வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தவிட வேண்டும். இவ்வாறு அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா திரிவேதி அமர்வில் கடந்த 27ம் தேதி வந்தது. ஏற்கனவே இது பற்றி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுடன் இணைந்து, இந்த மனுவையும் விசாரிப்பதாக அமர்வு தெரிவித்துள்ளது.