திமுக அரசின் ஏமாற்று வேலையை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமானது தொடங்கப்பட்டது. போராடுபவர்களில் ஒற்றை கோரிக்கை என்பது சம வேலைக்கு, சம ஊதியம் என்பதுதான்.
பள்ளி கல்வித்துறை தொடக்க கல்வி துறையில் பணியாற்ற கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு 2009 மே மாதத்திற்கு முன்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு ஊதிய விகிதமும் அதற்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு மற்றொரு ஊதிய விகிதமும் பின்பற்றப்படுகின்றது என்பது தான் இப்போராட்டத்தின் முக்கிய காரணம்.
சம வேலை செய்யும் எங்களுக்கு சம ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக இருக்கிறது என ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதன்படி இப்போராட்டம் 4 வது நாளாக தொடர்கிறது.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரையில் 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நல குறைவு காரணமாக ஆம்புலன்ஸ்கள் மூலமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அதிக அளவிலான ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து வரும் நிலை ஏற்படும், கண்டும், காணாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
போராட்டம் பற்றி பொதுசெயலாளர் ராபர்ட் கூறுகையில், இது இன்று நேற்று என்று உருவான பிரச்னை அல்ல, 14 ஆண்டுகளாக நடைபெறும் ஒரு பிரச்சனை. கடந்த 2018ம் ஆண்டு ஸ்டாலின் இதே களத்திற்கு வந்து ‘‘சம வேலைக்கு சம ஊதியம் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே வழங்கப்படும்” என்று அறிவித்து இருந்தார். நாங்களும் அதை நம்பி, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்ப்பாத்துக் காத்திருந்தோம். ஆனால் 20 மாதங்கள் ஆகியும் எதுவும் நடக்காததால் கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் போராட்டத்தை தொடங்கினோம்.
1.1.2023 இந்த புத்தாண்டின் முதல் அறிவிப்பாக, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண் பிரச்சனை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். ஆனால் 3 மாதங்காளில் முடியும் என்று சொல்லி தற்போது 10 மாதங்கள் ஆகியும் எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால், இன்று நடந்த பேச்சு வார்த்தையில் எங்களுக்கு மேலும் கால அவகாசம் தேவை என்று அறிவித்தார்கள்.
அதற்கு எங்கள் தரப்பிலிருந்து, நாங்கள் கால அவகாசம் தர தாயாராக இருக்கிறோம். ஆனால் எந்த தேதியில் இருந்து எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேதியை அறிக்கையாக வெளியிட்டால் நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளோம். அது வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.