ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கத்தில் திமுகவின் தீர்மானம் மீது கேள்வி எழுப்பி வரும் பா.ஜ., கவுன்சிலரை பேச விடாமல் வெளியாட்களை வைத்து மிரட்டுகின்ற வகையில் திமுக நகராட்சி தலைவரின் கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் திமுக தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட போது குறிக்கிட்ட பா.ஜ., கவுன்சிலர் குமார் தீர்மானம் பற்றிய விளக்கம் கேட்டார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக கவுன்சிலர் குமார், நகராட்சி பணிகளில் திமுகவின் ஊழல்களை குறிப்பிட்டு பேசியுள்ளார். இதன் காரணமாகவே கூட்டம் நடைபெறும் சமயத்தில் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால் பாஜ கவுன்சிலர் குமார் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, நான் உண்மையைத்தான் கூறினேன் என்றார். மேலும் கூட்டத்தில் தலைவரிடம் கேள்வி கேட்க உரிமை உள்ளது என வாக்குவாதம் செய்தார். இதனால் கூட்டத்தில் கூச்சல்குழப்பம் ஏற்பட்டது.
இதனிடையே வெளி நபர் ஒருவர் உள்ளே நுழைந்து குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது. அதன் பின்னர் உள்ளே இருந்த கவுன்சிலர்கள் அவரை வெளியே அனுப்பினர். தொடர்ந்து கூச்சல், குழப்பத்துக்கு இடையே அவசர அவசரமாக தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு திமுக தலைவர் வெளியேறிவிட்டார்.
இது பற்றி பாஜ கவுன்சிலர் குமார் கூறுகையில், நகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து குறைகளை கூறி விளக்கம் கேட்பதால் என்னை பேசவிடாமல் தலைவரின் தூண்டுதலின் பேரில் திமுக கவுன்சிலர்கள் பிரச்னை செய்கின்றனர். கூட்ட விதிகளுக்கு புறம்பாக தீர்மானங்களை வாசிக்காமல் 1,2,3 எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.
கூட்ட அரங்கிற்குள் வெளி நபர் உள்ளே புகுந்து பிரச்னை செய்கிறார். இது தொடர்பாக எங்கள் கட்சி தலைமையிடத்தில் புகார் தெரிவித்துள்ளேன்.
நகராட்சி ஊழல் பட்டியல் தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மூலம் கவர்னருக்கு அனுப்ப உள்ளோம், என்றார். நடந்த சம்பவம் பற்றி பத்திரிகையாளர் மத்தியில் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் விரிவாக எடுத்துரைத்தார்.