சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் இன்று காலை (அக்டோபர் 5) திமுக அரசு போலீசாரை ஏவிவிட்டு கைது செய்தனர். இந்த கைதுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்;
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த 12,000 ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தேர்தல் வாக்குறுதி எண் 181ல் கூறி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆசிரியர்கள் பல முறை கோரிக்கை வைத்தும், பொய்யான நம்பிக்கை கொடுத்து வந்த திமுக, தற்போது அற வழியில் போராடிய ஆசிரியர்களை, சமூக விரோதிகளைக் கைது செய்வதைப் போல, அத்து மீறிக் கைது செய்திருக்கிறது.
வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல என்றாலும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தரக்குறைவாக நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வீண் விளம்பரத்துக்காக, சிலை வைக்கிறோம், பூங்காக்கள் கட்டுகிறோம் என்று கடன் மேல் கடன் வாங்கி, மக்களைக் கடன்காரர்களாக்கியிருக்கும் திமுக, நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியப் பெருமக்களை அவல நிலையில் தள்ளியிருக்கிறது.
உடனடியாக, கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.